Mettur Dam
காவிரி ஆறு- கர்நாடகாவில் மழை
விவசாயிகளின் முக்கிய ஆதாரமாக இருப்பது காவிரி ஆறு. இந்த காவிரி ஆறு கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகி பல்வேறு மாவட்டங்களை கடந்து தமிழகத்திற்கு வருகிறது. தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுவிலிருந்து ஒக்கேனக்கல் தருமபுரி, சேலம் வழியாக மேட்டூர் அணையை வந்தடைகிறது. அங்கிருந்து டெல்டா மாவட்ட விவசாயங்களுக்கு திறந்து விடப்படுகிறது.
காவிரியில் வெள்ளப்பெருக்கு
இந்தநிலையில் கடந்த ஓராண்டாகவே மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்திருந்து. 100 அடியை கூட எட்ட முடியாத நிலை நீடித்தது. இந்தநிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணை நீர்மட்டம் 40 அடியில் இருந்தது. தற்போது கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக நீர்பிடிப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடகவில் உள்ள கேஆர்எஸ், கபினி உள்ளிட்ட அணைகள் நிரம்பியது. இதனையடுத்து அங்கிருந்து சுமார் 1.65ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
1.55 லட்சம் கன அடி நீர்- ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு
கர்நாடகா அணைகளில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் காவரி ஆற்றியில் நேற்று இரவு 1.41 லட்சம் கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 1.55 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தொடர்ந்து 13வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிடு, கிடுவென உயரும் மேட்டூர் அணை
அதே நேரத்தில் மேட்டூர் அணைக்கும் நீர் வரத்து கிடு, கிடுவென உயர்ந்துள்ளது. சுமார் 15 நாட்களில் மேட்டூர் அணை நீர் மட்டம் 60 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது. தற்போது மேட்டூர் அணைக்கு நீர் வரத்து ஒரு லட்சத்திற்கு மேல் வருவதால் மேட்டூர் அணை நிரம்பும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 1.35 லட்சமாக உள்ளது. இதன் காரணமாக 107 அடியை மேட்டூர் அணை எட்டியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் முழு கொள்ளளவான 120அடியை மேட்டூர் அணை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.