Kallakurichi
கள்ளக்குறிச்சி மரணம்
தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் நடைபெற்ற விஷச்சாராய மரணம். கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் அருந்தியதில் 66 பேர் பலியாகினர். தமிழகம் முழுவதும் பெரும் பதட்டத்தை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்கட்சிகளான அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக ஆகியோர் சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தினர். இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
kallakurichi
கண்டுகொள்ளாத தமிழக அரசு
இந்த வழக்குகளை நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த விசாரணையின் போது அதிமுக வழக்கறிஞர் ஐ.எஸ். இன்பதுரை தரப்பில் வாதாடுகையில், கடந்த 2023ம் ஆண்டில் மரக்காணத்தில் இதேபோல, விஷச் சாராயம் குடித்து 30 பேர் பலியானர். அதன் தொடர்ச்சியாக கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காவல் துறையிடம் புகார் அளித்தனர்.
மேலும் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இருப்பினும் தமிழக அரசு சார்பாக எந்த வித தடுப்பு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த பகுதியில் தங்கு தடையின்றி சாராய விற்பனை நடந்து வருகிறது. மேலும் அண்டை மாநிலமான புதுச்சேரியில் இருந்து கள்ளச்சாராயத்தில் கலக்க எத்தனால் கொண்டு வரப்பட்டுள்ளதால், விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வாதிட்டார்.
Kallakurichi
போலீஸ்- கள்ளச்சாராய வியாபாரி தொடர்பு
இதனை தொடர்ந்து பாமக வழக்கறிஞர் கே.பாலு தரப்பில், ஆண்டுதோறும் இதுபோல் தொடர்வதால், அரிதான வழக்காக கருதி இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அல்லது சிபிஐக்கு வழக்கை மாற்ற வேண்டும் கோரினார் மேலும் போலீஸ் - கள்ளச்சாராய வியாபாரிகளுக்கும் இடையில் தொடர்பு உள்ளதாகவும் கூறினார். எனவே கள்ளக்குறிச்சி விஷச்சாராயா வழக்கில் சுதந்திரமான அமைப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும் கேட்டுக்கொண்டார். இதே போல பா.ஜ.க வழக்கறிஞர் மோகன்தாஸ், வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஸ்ரீதரன் தரப்பிலும் வாதிடப்பட்டது.
நீதிபதி தலைமையில் ஆணையம்- தமிழக அரசு
இந்த வழக்கு விசாரணையில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என வாதிடப்பட்டது. இந்த வாதங்களுக்கு பதிலளித்த தமிழக அரசுத்தரப்பில், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க ஆலோசனைகள் வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மேலும் வழக்கை விசாரிக்க சிபிசிஐடி டி.எஸ்.பி. தலைமையில், 50 பேர் அடங்கிய 16 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை கைது செய்யப்பட்ட 24 பேரில் 11 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
kallakurichi
சிபிஐக்கு மாற்றம்
மேலும் மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், காவல் கண்காணிப்பாளரும், மதுவிலக்கு பிரிவு அதிகாரிகளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து இன்று கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கு சிபிஐக்கு மாற்றுவது தொடர்பாக தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தனர். இதன் படி இன்று காலை தீர்ப்பை வாசித்த நீதிபதிகள் கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டனர்.