Sabarimala Devotees Insurance Scheme : கேரளாவில் உள்ள சபரிமலைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், முக்கிய விஷேச நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்களின் பாதுகாப்பிற்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
மேலும் பல வித சிறப்பு வசதிகளும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சபரிமலை செல்லும் பக்தர்கள் பத்தினம்திட்டா, இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா ஆகிய 4 மாவட்டங்களில் நடக்கக்கூடிய விபத்தில் சிக்கினால் அவர்களது குடும்பத்தினருக்கு 5லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது.
சபரிமலை பக்தர்களுக்கு காப்பீடு
இந்த நிலையில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் எங்கு விபத்து நடந்து ஐயப்ப பக்தர்கள் பலியானாலும், ரூ.5 லட்சம் இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் கூறுகையில்,
சபரிமலைக்கு வரக்கூடிய பல்வேறு மாநில ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. இதன் படி சபரிமலைக்கு வரும் பக்தர்கள் சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்தால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இன்சூரன்ஸ் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது.
sabarimala
காப்பீடு நிபந்தனைகள் தளர்வு
இந்த திட்டத்தின் கீழ் காப்பீட்டு தொகை வழங்க பல்வேறு கட்டுப்பாடுகளை இன்சூரன்ஸ் நிறுவனம் நிபந்தனை விதித்திருந்தது. இந்த நிபந்தனை தற்போது தளர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி கேரள மாநிலத்தில் எந்த பகுதியில் சாலை விபத்தில் சிக்கி ஐயப்ப பக்தர்கள் மரணமடைந்தாலும், அவர்களது குடும்பத்துக்கு இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும்.
மேலும் சபரிமலை வரும் வழியில் மாரடைப்பு மற்றும் பல்வேறு நோய்கள் காரணமாக இயற்கையாக மரணமடையும் பக்தர்களுக்கும் இன்சூரன்ஸ் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கை தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
sabarimala temple rush
பக்தர்களிடம் பணம் வசூல் திட்டம்
இதுமட்டுமில்லாமல், இயற்கையாக மரணமடையும் பக்தர்களுக்கு ரூ.3லட்சம் இன்சூரன்ஸ் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டத்துக்காக நன்கொடையாளர்களிடம் இருந்து நிதி சேகரிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் ஆன்லைன் முன்பதிவு செய்யும் பக்தர்களிடமிருந்து கட்டணமாக ரூ.5 வசூலிக்கவும் ஆலேசிக்கப்பட்டு வருகிறது என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்தார்.