கிடங்கு நெருக்கடி காரணமாக, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அட்டைதாரர்களுக்கு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான இலவச அரிசி மற்றும் கோதுமையை ஒரே தவணையில் வழங்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த வேளாண் பருவத்தில் நாடு முழுவதும் விவசாயிகளிடமிருந்து அதிக அளவில் அரிசி மற்றும் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டதால், அவற்றைச் சேமிக்கும் கிடங்குகளில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அட்டைதாரர்களுக்கு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான இலவச அரிசி மற்றும் கோதுமையை ஒரே தவணையில் வழங்க மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளையும் அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவுறுத்தலுக்கு தமிழக அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.
24
ரேஷன் கடைகள்
தமிழகத்தில் 2.21 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் தமிழக ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதில், 1.11 கோடி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு சார்பில் மாதந்தோறும் 2.05 லட்சம் டன் அரிசியும், 8,576 டன் கோதுமையும் இலவசமாக வழங்கப்படுகிறது.
34
3 மாதங்களுக்கான ரேஷன் பொருட்கள்
தற்போது, கிடங்குகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தணிக்கும் வகையில், மத்திய அரசு இந்த சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம், முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அட்டைதாரர்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கான அரிசி மற்றும் கோதுமையை ஒரே நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
மத்திய அரசின் இந்த அறிவுறுத்தலை ஏற்று, தமிழக அரசு மூன்று மாதங்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை ஒதுக்கீடு செய்ய சம்மதம் தெரிவித்துள்ளது. இதனால், பயனாளர்கள் இனி ஒரே தவணையில் தேவையான பொருட்களைப் பெற்று சேமித்து வைக்கலாம்.