அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையம், முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இலவச மாதிரி ஆளுமைத் தேர்வை நடத்துகிறது. இதில் பங்கேற்கும் தேர்வர்களுக்கு டெல்லியில் நடைபெறும் ஆளுமைத் தேர்வுக்கு சென்றுவர பயணச் செலவாக ரூ.5,000 வழங்கப்படும்.
கல்வி தான் மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கிய அடித்தளமாக அமையும். அந்த வகையில் ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி பயில பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசின் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம், ஐஏஎஸ் ஐபிஎஸ் இலவச பயிற்சி தொடர்பான அறிவிப்பும், ஆளுமைத் தேர்வுக்குச் சென்றுவர பயணச் செலவுத் தொகையும் வழங்கி வருகிறது.
25
தமிழக அரசு
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும், அகில இந்திய குடிமைப்பணித்தேர்வுப் பயிற்சி மையத்தில், ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் ஆளுமைத் தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் உள்ள சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த ஆர்வலர்கள் பயனடையும் வகையில் இப்பயிற்சி மையம் திறம்பட செயல்பட்டு வருகிறது.
35
ஆளுமைத் தேர்வு
அதன் தொடர்ச்சியாக, இப்பயிற்சி மையத்தில் 2025- ஆம் ஆண்டில் முதன்மைத் தேர்வுக்கு பயின்ற 376 ஆர்வலர்களில், 34 மகளிர் மற்றும் 6 மாற்றுத்திறனாளிகள் உட்பட 87 ஆர்வலர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தற்போது, இம்மையத்தின் சார்பாக முதன்மைத் தேர்வில் தகுதிப் பெற்ற தேர்வர்களுக்கு வருகின்ற டிசம்பர் 19 மற்றும் 20 ஆகிய நாட்களில் மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
இம்மாதிரி ஆளுமைத் தேர்வில் பங்கு பெற விரும்பும் தேர்வர்கள் இன்று மாலை 5 மணிக்குள் www.civilservice coaching.com என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். DAF-I & DAF-II விவரங்களை அவசியம் பதிவு செய்து அவற்றை aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கட்டாயம் அனுப்பி வைக்குமாறு தேர்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் மட்டுமல்லாமல் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த பிற தேர்வர்களும் இம்மையத்தால் நடத்தப்பட உள்ள மாதிரி ஆளுமைத் தேர்வில் பங்கு பெற அனுமதிக்கப்படுவர்.
55
பயண செலவுத் தொகை ரூ.5,000
மேலும், மாதிரி ஆளுமைத்தேர்வில் தேர்வர்களின் செயல்பாட்டினை ஒளி/ஒலி பதிவு செய்து இணைய வழி அனுப்பி வைக்கப்படும். இம்மாதிரி ஆளுமைத்தேர்வில் பங்கேற்கும் ஆர்வலர்களுக்கு, டெல்லியில் நடைபெறும் ஆளுமைத் தேர்வுக்குச் சென்றுவர பயணச் செலவுத் தொகையாக ரூ.5,000 வழங்கப்படும். மேலும், இன்று மாலை 5.00 மணிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு, 044-24621475 என்ற தொலைபேசி எண் வாயிலாகவும், 9345766957 என்ற புலன எண் (Whatsapp) மூலமாகவும், aicscc.gov@gmail.com என்ற அலுவலக மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.