ஓய்வூதியம் ரூ.5000 உயர்வு... குடும்ப ஓய்வூதியம் ரூ.2500.! அசத்தலான திட்டத்தை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின்!

Published : Oct 06, 2025, 03:06 PM IST

Tamilnadu Government: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியத்தை ரூ.4,000-லிருந்து ரூ.5,000 ஆகவும், குடும்ப ஓய்வூதியத்தை ரூ.2,500 ஆகவும் உயர்த்தி அறிவித்துள்ளார். 

PREV
14

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு துறை நிலையிலான ஓய்வூதியத் திட்டத்தின்கீழ், வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத்தை ரூ.4,000லிருந்து ரூ.5,000ஆகவும், குடும்ப ஓய்வூதியத்தை ரூ.2,000லிருந்து ரூ.2,500ஆகவும் உயர்த்தி, தொழிலாளர் சேமநலநிதி (EPF) மூலம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு முதன்முறையாக துறை நிலையிலான ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்திற்கு இணையாக கருணைக் தொகை (EX–gratia) வழங்கி, 3,037 ஓய்வூதியதாரர்கள் மற்றும் 769 குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 12 நபர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதிற்கான காசோலைகளை வழங்கினார்.

24

இந்து சமய அறநிலையத்துறையானது தொன்மை வாய்ந்த திருக்கோயில்களை பழமை மாறாமல் புனரமைத்து குடமுழுக்கு நடத்துதல், திருத்தேர் மற்றும் திருக்குளங்களை சீரமைத்தல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற பணியாளர்களின் நலன்களை பாதுகாத்தல் போன்ற பல்வேறு பணிகளை செம்மையாக மேற்கொண்டு வருகிறது. மேலும் சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.

34

2025 – 2026 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற அறிவிப்புகளில் “திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்று, துறை நிலை ஓய்வூதியம் பெறும் திருக்கோயில் பணியாளர்களுக்கு தற்போது ரூ.4,000 ஒய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதியம் ரூ.4,000லிருந்து ரூ.5,000ஆக உயர்வு செய்யப்படும் எனவும், துறை நிலை குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு தற்போது ரூ.2,000 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதியம் ரூ.2,000/–லிருந்து ரூ.2,500ஆக உயர்வு செய்யப்படும் எனவும், “திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்று, தொழிலாளர் சேமநலநிதி (EPF) ஓய்வூதியம் பெறும் திருக்கோயில் பணியாளர்கள் தற்போது ரூ.900 முதல் ரூ.2,190 வரை மட்டுமே ஒய்வூதியமாக பெற்று வருகின்றனர். இவர்களுக்கு துறை நிலையிலான ஓய்வூதியம் பெறும் பணியாளர்களுக்கு இணையாக கருணைத்தொகை (EX–gratia) வழங்கப்படும். இத்தொகை ஆணையர் அலுவலகத்தில் பேணப்படும் மையநிதி வட்டித் தொகையிலிருந்து வழங்கப்படும் என்றும், மேலும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் கருணைத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

44

அந்த அறிவிப்புகளை செயல்படுத்திடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், துறை நிலையிலான ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற திருக்கோயில் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியத் தொகை ரூ.5,000 மற்றும் உயர்த்தப்பட்ட குடும்ப ஓய்வூதியத் தொகை ரூ.2,500க்கான காசோலைகளையும், தொழிலாளர் சேமநலநிதி (EPF) மூலம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு துறை நிலையிலான ஓய்வூதியத்திற்கு இணையாக கருணைக் தொகையை அளித்து அதற்கான காசோலைகளையும் வழங்கினார். இதன்மூலம் துறை நிலையிலான மற்றும் தொழிலாளர் சேமநலநிதி மூலம் ஓய்வூதியம் பெறும் 3,037 ஓய்வூதியதாரர்கள் மற்றும் 769 குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Read more Photos on
click me!

Recommended Stories