தமிழகத்தில் அரசு பேருந்து விபத்துக்கள் அதிகரித்து வருவதால், ஓட்டுநர்கள் பேருந்தை இயக்கும்போது செல்போன் பயன்படுத்துவதே முக்கிய காரணமாக கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தடுக்கும் நோக்கில், ஓட்டுநர்கள் செல்போன்களை நடத்துனரிடம் ஒப்படைக்க வேண்டும்.
தமிழகத்தில் அரசு பேருந்து விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் நோக்கில் ஓட்டுநர் மற்றும் நடந்துனர்களுக்கு போக்குவரத்து சார்பில் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக ஓட்டுநர்கள் செல்போனில் பேசிய படி பேருந்தை இயக்குவதால் அதிகளவில் விபத்து ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ அவ்வப்போது வெளியாகி வருகிறது. இதுகுறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு ஓட்டுநர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
24
மாநகர போக்குவரத்துக் கழகம்
இந்நிலையில், ஓட்டுனர்கள் செல்போன் பேசிக் கொண்டு பேருந்தை இயக்குவது அதனை தடுக்க அனைத்து கிளை மேலாளர்களுக்கு மாநகர போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்பு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதற்கான காரணம் என்னவென்று ஆய்வு செய்த போது சில ஓட்டுனர்கள் பேருந்தை இயக்கும்போது செல்போன் பேசிக் கொண்டே இயக்குவதை பொது மக்கள் புகார் மற்றும் பேருந்தின் சிசிடிவி கேமராக்களின் மூலம் தெரியவந்தது.
34
செல்போன் பயன்படுத்த தடை
இவ்வாறு ஓட்டுனர்கள் செல்போன் பேசிக் கொண்டே பேருந்தை இயக்கும் போது கவனச் சிதறல் ஏற்பட்டு சாலை விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே இனிவரும் காலங்களில் மாநகரப் போக்குவரத்து கழகத்தின் ஓட்டுநர்கள் தங்கள் பணியின் போது தங்களது செல்போன்களை தன்னுடன் பணி செய்யும் நடத்துனரிடம் கொடுத்து வைக்க வேண்டும்.
பின்னர் பணி முடிந்த பிறகு செல்போனை நடத்துனரிடமிருந்து பெற்று செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் ஓட்டுநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். செல்போனை பயன்படுத்தாமல் பாதுகாப்பாக வாகனம் இயக்குவது குறித்து பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.