கோடை வெயில்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எப்போது முடிவடைந்ததோ அன்று முதல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் இருந்து வெயில் சுட்டெரிக்கிறது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கியதை அடுத்து வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர். மார்ச் மாதத்திலேயே வெயில் இப்படி என்றால் மே மாதத்தில் அதாவது அக்னி வெயிலானது எப்படி இருக்க போகிறது என நினைத்து பொதுமக்கள் இப்போதே பீதி அடைகின்றனர்.
சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
இதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறையும் அறிவுறுத்தியுள்ளது. நேற்றைய தினம் தமிழகத்தில் 8 இடங்களில் வெப்பம் சதம் அடித்தது. அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி, கரூர் 102.2 டிகிரி, திருப்பத்தூர் 102.2 டிகிரி, சென்னை மீனம்பாக்கம் 101.66 டிகிரி, ஈரோடு 101.12 டிகிரி, சேலம் 101.12 டிகிரி, திருத்தணி 100.4 டிகிரி, திருச்சி 100.22 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க: 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய செய்தி! கூடுதலாக ஒரு மணி நேரம்! அன்பில் மகேஷ் தகவல்!
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
இதனிடையே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் ஓரிரு இடங்களில் 3 டிகிரி மேல் வெப்பம் உயர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் வெப்பம் எப்படி இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தமிழ்நாட்டிற்கு இன்னொரு மோசமான நாள், வேலூர் மீண்டும் 40 டிகிரி செல்சியஸை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் 39 டிகிரி செல்சியஸை நெருங்கலாம்.
வெப்பம் அதிகரிக்கும்
மதுரையில் சுமார் 39 டிகிரி செல்சியஸ், சேலம் சுமார் 38/39 டிகிரி செல்சியஸ், கரூர் மற்றும் ஈரோடு 39 டிகிரி செல்சியஸ் என இருக்கும். மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் சுமார் 38 டிகிரி செல்சியஸ் இருக்கும். நேற்று மீனம்பாக்கம் 38.7 டிகிரி செல்சியஸ் உடன் மாநிலத்தின் இரண்டாவது வெப்பமான இடமாக இருந்தது. வேலூர் 40 டிகிரி செல்சியஸ் ஐத் தொட்டது என்று பதிவிட்டுள்ளார்.