மீண்டும் சென்னையை குறிவைத்து வரும் கனமழை.! தேதி குறித்த தமிழ்நாடு வெதர்மேன்

First Published | Nov 8, 2024, 1:27 PM IST

தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

தமிழகத்தில் வெளுத்து வாங்கிய மழை

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து அனைத்து இடங்களிலும் மழை கொட்டி வருகிறது. ஒரு சில இடங்களில் மழையானது வெளுத்து வாங்கியது. குறிப்பாக மதுரை, திருச்சி, கோவை, சென்னை போன்ற பகுதிகளில் யாரும் எதிர்பார்க்காத வகையில்  மழை கொட்டித்தீர்த்தது.

இந்தநிலையில் மன்னார் வளைகுடா மற்றும்  தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின்  ஓரிரு இடங்களில் நவம்பர் 14ம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் படி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இன்று மழையானது தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Rains

தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை

இதனிடையே நேற்று இரவு முதல் திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல சிவகங்கை மாவட்டத்திலும் மழை தொடர்வதால் மழையின் பாதிப்பை பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு எடுத்துக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

Tap to resize

Tamil nadu rains

இரண்டு நாட்கள் தொடரும் மழை

இந்தநிலையில் நாளை கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, மாவட்டங்களிலும், காரைக்கல் பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை மறுதினம் 10ஆம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகபட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

சென்னைக்கு மீண்டும் மழை எப்போது.?

இந்த நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், மழையானது இன்று தென் தமிழகத்திற்கு சென்றுள்ளது. குமரி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி, தென்காசி, சிவகங்கை என அனைத்து இடங்களிலும் இன்று மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.

மேலும்  நாகை- திருவாரூர் பெல்ட்டை சுற்றியுள்ள டெல்டா பகுதிகளிலும் மழையும் பெய்து வருவதாகவும் கூறியுள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு(KTCC) ஆகிய பகுதிகளில் 2 நாள் மழைக்கு பிறகு இன்று இடைவேளை கிடைத்துள்ளதாகவும், மீண்டும் வருகிற 12ம் தேதிக்குள் மழை திரும்ப வரும் என தெரிவித்துள்ளார்.

Latest Videos

click me!