டிட்வா புயல், சென்னை-புதுச்சேரி இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு, பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள டிட்வா புயல் காரைக்காலில் இருந்து தெற்கு தென் கிழக்கே 220 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 330 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கே 430 கி.மீ. தொலைவிலும் தற்போது மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிமீ வேகத்தில் வடக்கு திசையில் நகர்ந்து வருகிறது. இதையடுத்து, நவம்பர் 30ம் தேதி அதிகாலையில் புதுச்சேரி மற்றும் சென்னை இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
24
20 செ.மீ. மழை பெய்ய வாய்ப்பு
இதன் காரணமாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரிக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் இன்று 20 செ.மீ. மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதேபோல் தூத்துக்குடி, சிவகங்கை, அரியலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
34
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
இந்நிலையில், டிட்வா புயல் கனமழை காரணமாக இன்று திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த வகையான சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.