கோடை வெயிலுக்கு தமிழகம் தயார்.! மின்வெட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஸ்கெட்ச் போட்ட செந்தில் பாலாஜி

First Published | Jan 24, 2025, 2:27 PM IST

கோடை காலத்தில் புதிய துணை மின் நிலையங்கள் நிறுவப்பட்டு, திறன் மின் மாற்றிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மின்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதன் மூலம் மின்வெட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது.

மாறி வரும் காலநிலை

தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தின் காரணமாக அதீம மழை, தாங்க முடியாத வெயில் வாட்டி வதைக்கிறது. அந்த வகையில் கடந்த 2024ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் வெப்பத்தின் தாக்குதல் காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் வருகிற பிப்ரவரி இறுதி முதல் மீண்டும் வெயிலின் தாக்கம் தொடங்கவுள்ளது. இதன் காரணமாக மின் தேவை அதிகரிப்பதால் பற்றாக்குறை உருவாகும் சூழல் உருவாகும். எனவே இதனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. 
 

மழை பாதிப்பு- அமைச்சர் பாராட்டு

அந்த வகையில்  கோடை காலத்தில் தமிழ்நாடு முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்குவதற்கு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்களுடன் மின்சாரத்துறை அமைச்சர் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது வடகிழக்கு பருவமழை மற்றும் பெஞ்சல் புயல் காரணமாக, பாதிப்படைந்த சுமார் 12.265 மின் கம்பங்கள், 343 பில்லர் பெட்டிகள், 680.86 கி.மீ மின் கம்பிகளைபோர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து மின் விநியோக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு குறுகிய காலத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் சீரான மின்சாரம் வழங்கியதற்காக அனைத்து அலவலர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.


senthil balaji

கோடையை எதிர்கொள்ள தயாராகும் தமிழகம்

எதிர்வரும் கோடைகாலத்தில் தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மின்சாரம் வழங்குவதற்கு மின்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்காக இதுவரை 48 துணை மின் நிலையங்கள் புதிதாக நிறுவப்பட்டுள்ளன. 20 புதிய துணை மின் நிலையங்கள் நிறுவதற்கான பணிகள் நடைப்பெற்று வருகின்றன. மேலும், தமிழ்நாடு முழுவதும். இயக்கத்தில் உள்ள 260 திறன் மின் மாற்றிகளின் (Power Transformer) தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 22 திறன் மின் மாற்றிகளின் தரம் உயர்த்தும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.

power cut

மின் வெட்டு இல்லாத தமிழகம்

மேலும், அதிகரித்து வரும் மின் தேலையினை கருத்தில் கொண்டு கூடுதலாக அமைக்க வேண்டிய புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் திறன் மின் மாற்றிகள் குறித்தும். குறிப்பாக, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளின் மின் தேவையினை கருத்தில் கொண்டு நிறுவப்பட உள்ள துணை நிலையங்கள் குறித்தும் அறிவுரை வழங்கினார். மின் பகிர்மான வட்டம் வாரியாக விரிவான ஆய்வினை மேற்கொண்ட மாண்புமிகு மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் வட்ட அளவில் அதிக அளவு மின் தடைகள், மின்மாற்றிகள் பழுது மற்றும் மின்னகத்தில் பெறப்பட்ட புகார்கள் கொண்ட மேற்பார்வைப் பொறியாளர்கள் தமது பணிகளில் தனிக்கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார்.

power cut

தடையில்லா மின்சாரம்

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் இருக்கக்கூடிய துணை மின் நிலையங்கள், மின்மாற்றிகள் மற்றும் பில்லர் பெட்டிகள் ஆகியவற்றில் உரிய முறையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு தனிக்கவனம் செலுத்தி, தொடர்ச்சியாக மின்தடங்கல் ஏற்படும் இடங்களில் மின்நுகர்வோரிடமிருந்து வரும் புகார்களை குறைப்பதற்கு தக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு மின்சாரத்துறை அமைச்சர்  உத்தரவிட்டார். தமிழ்நாட்டு மக்களுக்கு தடையில்லா. சீரான மின்சாரம் வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.

Latest Videos

click me!