Toll gate fees in tamilnadu : தமிழகம் மட்டுமல்ல நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளது. இந்த சுங்க சாவடியில் வசூலிக்கப்படும் கட்டணம் தான் தற்போது முக்கிய டாபிக்காக உள்ளது. பல இடங்களில் ஒரு முறை கடப்பதற்கு 100 ரூபாய் வரை வசூலிக்கப்படும் நிலை உள்ளது. இதனால் சென்னையில் இருந்து மதுரை செல்வதற்குள் குறைந்த பட்சம் சுங்க கட்டணமாக 500 முதல் 700 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடையும் நிலை நீடிக்கிறது. இந்த நிலையில் இது போதாதென இன்று முதல் மீண்டும் சுங்கச்சாவடி கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் படி நடப்பாண்டில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில்,
இன்று முதல் சுங்கசாவடி கட்டணம் உயர்வு
வானகரம், செங்கல்பட்டு பரனூர், திண்டிவனம் ஆத்தூர், சூரப்பட்டு, பட்டறைப்பெரும்புதூர் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் இன்று முதல் உயர்த்தப்படவுள்ளது. சுங்கக்கட்டணமானது இன்று முதல் குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.75 வரை நுழைவு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர். எனவே குத்தகை காலம் முடிந்த சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என கோரிகை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை இன்று தமிழக சட்டசபையிலும் எதிரொலித்தது.
மாநில அரசின் கட்டுப்பாட்டில் சுங்கச்சாவடி
தமிழக சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திண்டுக்கல் சீனிவாசன், ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழகத்தின் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். இந்த அரசு பதவி ஏற்றபோது 48 வது சுங்கச்சாவடிகள் இருந்தன ,
தற்போது 65 க்கும் கூடுதலாக சுங்கச்சாவடிகள் உள்ளன. சுங்க கட்டணங்களை தவிர்க்க மத்திய அரசிடம் மாநில நெடுஞ்சாலைகளை ஒப்படைக்காமல் தமிழக அரசே நிதி ஒதுக்கி அவற்றை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று பேசினார்.
கட்டணங்களை குறைக்க நடவடிக்கை
இதற்கு பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு, தமிழகத்தில் 77 சுங்கச் சாவடிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில், 13 சுங்கச்சாவடி காலாவதி ஆகிய உள்ளது. இவற்றில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியதாக தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த மத்திய அரசு, ஒன்றிய அரசு சுங்க விதிகளில் மாற்றம் செய்துள்ளதாகவும்,
சுங்கச்சாவடி காலாவதி ஆகிவிட்டது என்று கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்றும் தொடர்ந்து கட்டண வசூலிக்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளதாகவும் கூறினார். ஆனாலும், கட்டணங்கள் குறைக்க தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறோம் என்று அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்தார்.