தமிழ்நாடு பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து இறக்கப்படுகிறாரா அண்ணாமலை? காரணம் இதுதான்?

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக கூட்டணியில் குழப்பம் நிலவுகிறது. பாஜகவுடன் கூட்டணி அமைக்க அண்ணாமலை எதிர்ப்பு தெரிவிப்பதால், தலைவர் மாற்றம் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Tamil Nadu BJP state president Annamalai : தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 10 மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு தயாராகும் வகையில் திமுக ஏற்கனவே பல திட்டங்களை வகுத்துள்ளது. அதன் படி 200 தொகுதியில் வெற்றி இலக்கு என நிர்ணயித்து கிளை கழகம் முதல் மாவட்டம் வரை பல்வேறு பணிகள் துரிதப்படுத்தியுள்ளது.

மேலும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை தங்களை விட்டு பிரிந்து செல்லாமல் கூட்டணியானது தொடரும் வகையில் அவ்வப்போது கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசித்து வருகிறது. இதன் காரணமாக தற்போது வரை திமுகவின் கூட்டணி வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் தொடரும் குழப்பம்

அதே நேரம் திமுகவை எதிர்க்க பலம் பொருந்திய கூட்டணியை அமைக்க அதிமுக திட்டமிட்டது. ஆனால் ஒரு அடி ஏறினால் 3 அடி சறுக்கும் நிலை உள்ளது.  அந்த வகையில் ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி இல்லையென அதிமுக அறிவித்து விட்ட நிலையில், தற்போது தவெகவுடன் கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டார்.

ஆனால் விஜய் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை தணித்து எதிர்கொள்ள இருப்பதாக அறிவித்து விட்டார். இதன் காரணமாக வேறு வழியில்லாமல் அதிமுக, மீண்டும் பாஜகவை தங்கள் அணியில் இழுக்க திட்டம் போட்டது. இதற்காக டெல்லி சென்று அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தையும் நடத்தியது.


மீண்டும் பாஜக கூட்டணிக்கு தூது

இதன் படி இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ள நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எதிர்ப்பார் என்ற கருத்து நிலவியது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் தலைவர் பதவியில் இருந்து விலகுவேன் என்று முன்பு அறிவித்து இருந்தார். எனவே தனது கருத்தையும் மேலிடத்தில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் பாஜக தேசிய தலைமையோ ஒருங்கிணைந்த அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவே விரும்புகிறது. எனவே தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலைக்கு பதிலாக தமிழிசை அல்லது நயினார் நாகேந்திரனை தலைவர் பதவியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அண்ணாமலையை மாற்ற திட்டம்

இந்த முடிவானது அதிமுக எதிர்ப்பிற்காக எடுக்கவில்லையெனவும் தமிழகத்தில் அனைத்து சமுதாயத்தாரின் வாக்குகளையும் ஈர்க்கவே காய் நகர்த்தப்படுவதாக பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் படி ஏற்கனவே கொங்கு மாவட்டத்தில் அதிமுக பலம் பொருந்தியுள்ளதாக இருப்பதால் அந்தப் பகுதியில் வாக்குகள் கிடைப்பது எளிதாகிவிடும்.

எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள். எனவே அதே கொங்கு மாவட்டங்களை சேர்ந்த அண்ணாமலையையும் மாநில தலைவராக தொடர்ந்தால் கொங்கு மாவட்டம் மட்டுமே முன்னிலையாக இருக்கும். தென் மற்றும் வட மாவட்டங்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகும்.

புதிய தலைவர் யார்.?

எனவே தென் மாவடங்களில் பாஜக வாக்குகளை கவர நாடார் அல்லது தேவர் இனத்தை சேர்ந்தவர்களை மாநில தலைவராக நியமிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 
எனவே தமிழிசை அல்லது நயினார் நாகேந்திரனை தலைவர் பொறுப்பில் அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரம் முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழகம் முழுவதும் பாஜகவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு ஆற்றியவர் அண்ணாமலை, அவருக்கு மரியாதை அளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

அமித்ஷாவின் தந்திரம்

மத்திய தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவதாகவும் ஏற்கனவே அண்ணாமலை அறிவித்து இருந்தார். மேலும், கட்சியின் தொண்டனாகக் கூட வேலை செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார். இந்த சூழலில் தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலை அண்ணாமலையை தவிர்த்து பார்க்க முடியாது.

பாஜக பல்வேறு மாநிலங்களில் வாக்குகளை ஈர்ப்பதற்கு என்ன தந்திரத்தை பயன்படுத்தியதோ அதே தந்திரத்தை இந்த முறை தமிழ்நாட்டில் பயன்படுத்த முன்னெடுத்து இருக்கிறது. இந்த தந்திரத்திற்கு முழுக்க முழுக்க பின்னணியில் இருந்து செயல்படுவது உள்துறை அமைச்சர் அமித் ஷா என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

Latest Videos

click me!