
மக்களுக்கு உயர் மருத்துவ சேவைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்வினை உறுதி செய்யும் வகையில், சட்டமன்ற மானியக் கோரிக்கை 2025-26ஆம் ஆண்டு அறிவிப்பின்கீழ், 1256 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்கின்ற அறிவிப்பினைத் தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டை, மாந்தோப்பு, சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னோட்டமாக நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமினை ஆய்வு மேற்கொண்டார்கள்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை மேலும் மெருகேற்றி Master Health Check up தனியார் மருத்துவமனைகளுக்கோ, அரசு மருத்துவமனைகளுக்கோ முழு உடற் பரிசோதனை என்று சென்றால் ரூ.1000/- தொடங்கி ரூ.5000/- வரை செலவாகின்றது.
தனியார் மருத்துவமனை என்று எடுத்துக் கொண்டால் ரூ.12,000/- வரை செலவாகின்றது. இந்த Master Health Check up என்பது முழு உடற் பரிசோதனை அனைத்து மக்களும் செய்து கொள்வது பொருளாதார ரீதியாக இயலாத காரியம். எனவே இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஒட்டு மொத்த மக்களும் முழு உடற் பரிசோதனை தெரிந்து கொள்வது அவர்களுடைய உடலில் உள்ள நோய் பாதிப்புகளுக்கு தீர்வு காண்பது என்கின்ற வகையில் ஒரு திட்டத்தை நிதிநிலை அறிக்கையில் அறிவித்தார்கள். இந்த திட்டத்திற்கு ஒரு புதிய பெயர் விரைவில் சூட்டப்படவிருக்கிறது. மிகவிரைவில் முதலமைச்சர் அவர்கள் சென்னையில் இருந்து இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்கள். இந்த திட்டத்தில் 17 வகையான சிறப்பு மருத்துவம்கள், 30 வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. முழு உடற் பரிசோதனைக்கு தேவையான ஒட்டுமொத்த பரிசோதனைகளும் இந்த முகாமில் மேற்கொள்ளப்படவிருக்கிறது.
அதேபோல் காப்பீட்டு திட்டத்தைப் பொறுத்தரை சென்னை நீங்கலாக, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களில் மட்டுமே புதிய காப்பீட்டு அட்டை வழங்கப்படும். சென்னை போன்ற மக்கள் அதிகமாக வாழும் இடங்களில் வருமுன் காப்போம் முகாம் நடைபெறும் இடத்தில் காப்பீட்டு திட்ட அட்டை இல்லாதவர்களுக்கு புதிய அட்டை உடனடியாக வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும். 17 வகையான சிறப்பு மருத்துவத்தோடு இந்திய முறை மருத்துவங்களான சித்தா, ஆயுர்வேதா. ஹோமியோபதி. யுனானி போன்ற மருத்துவமுறைகளும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. அந்தவகையில் பொது மருத்துவம்.
இருதய சிகிச்சை. மகப்பேறு மருத்துவம். ஸ்கேன் வசதிகள், அறுவை சிகிச்சைகள், எலும்பு முறிவு, மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, பல் மருத்துவம், கண் மருத்துவம், சித்த மருத்துவம், மனநல மருத்துவம். ஆய்வக சிகிச்சை, பரிசோதனை மாதிரிகள் சேகரித்தல், காசநோய் கண்டறிதல், மருந்தகம், புறநோயாளிகள் சிகிச்சை, புற்றுநோய் பரிசோதனை, குழந்தைகள் நலம் மற்றும் தடுப்பூசி போன்ற அனைத்து திட்டங்களும் இந்த முகாம்களில் நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது.
தமிழ்நாட்டில் இருக்கிற 388 வட்டாரங்களில் ஒரு வட்டாரத்திற்கு 3 முகாம்கள் ஒரு ஆண்டு முழுவதும் நடைபெறவிருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை மண்டலத்திற்கு 1 வீதம் 15 இடங்களில் இந்த முகாம்கள் நடைபெறவிருக்கிறது. தமிழ்நாட்டில் தற்போது 25 மாநகராட்சிகள் இருக்கின்றது. 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 5 மாநகராட்சிகள் (சென்னை நீங்கலாக) ஒரு மாநகராட்சிக்கு 4 என்கின்ற எண்ணிக்கையில் முகாம்கள் நடத்தப்படவிருக்கிறது.
10 இலட்சத்திற்கும் குறைவாக உள்ள 19 மாநகராட்சிகளில் 3 என்கின்ற வகையில் 57 மருத்துவ முகாம்கள் நடத்தப்படவிருக்கிறது. காலை 09 மணிக்கு தொடங்கி மாலை 04 மணி வரை நடைபெறவிருக்கின்ற இந்த மருத்துவ முகாம்கள் தமிழ்நாட்டில் இந்த மருத்துவ முகாம்கள் 1256 என்கின்ற எண்ணிக்கையில் நடத்தப்படவிருக்கிறது.
இந்த முகாம்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிக விரைவில் சென்னையில் தொடங்கி வைக்கப்படவிருக்கிறார்கள். இந்த முகாம்களை நடத்துவதற்கு அரசின் சார்பில் ஒரு முகாமிற்கு ரூ.75,000/- வீதம் பொது சுகாதாரத்துறை தரவிருக்கிறது. அதேபோல் மருந்து பொருட்களை பொறுத்தவரை ஒரு முகாமிற்கு ரூ.33,121/- வரை வழங்கப்படவிருக்கிறது. இதோடு உபகரணங்களுக்கான செலவு என்கின்ற வகையில் தேசிய நலவாழ்வு குழுமம் சார்பிலும் இதற்கு செலவிடப்படவிருக்கிறது. ஆக இந்த 1,256 மருத்துவ முகாமிற்கு ஏறக்குறைய ரூ.25 கோடி வரை செலவிடப்படவிருக்கிறது என தெரிவித்தார்.