தமிழ்நாடு முழுவதும் நியாயவிலைக் கடைகள் எனப்படும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. நடுத்தர மக்களுக்கு, ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் பொருட்களே வாழ்வாதாரமாக உள்ளது. ஆனால் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரம் சரியாக இல்லை என்றும், எடையும் சரியாக போடப்படுவதில்லை என்றும் தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
24
ரேஷன் பொருட்களின் தரம் சரியில்லை
அதாவது அரிசியில் கல், தவிடு, வண்டுகள் இருப்பது போன்ற புகார்கள் ஒருசில இடங்களில் இருந்து வருகின்றன. துவரம் பருப்பு மற்றும் பாமாயிலின் தரம் சில சமயங்களில் சரியாக இருப்பதில்லை எனவும் சில இடங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இது மட்டுமின்றி ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் மாதத்தின் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு கிடைப்பதில்லை எனவும் பரவலாக புகார்கள் எழுந்து வருகின்றன.
34
தமிழ்நாடு அரசு எடுத்த முக்கிய நடவடிக்கை
இந்நிலையில், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறையாத வகையில் தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. அதாவது சென்னை கோட்டூர்புரத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் உணவு வழங்கல் துறை, நுகர்பொருள் வாணிப கழகம், சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் ஒருங்கிணைந்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் தரமான ரேஷன் பொருட்களையே மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.
வாணிப கழக மண்டல மேலாளர்கள், கிடங்கு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், பொது வினியோக திட்ட கூட்டுறவு இணை பதிவாளர்கள் ஆகியோர் ரேஷன் பொருட்கள் வைக்கபட்டுள்ள கிடங்குகளில் தொடர்ந்து ஆய்வு செய்து பொருட்களின் தரத்தை பரிசோதனை செய்ய வேண்டும். ஆய்வு செய்த பிறகு அவற்றை மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்து தரத்தை உறுதி செய்த பின்னரே பொருட்களை ரேஷன் கடைகளுக்கு அனுப்ப வேண்டும் என்று அமைச்சர் சக்கரபாணி உத்தரவிட்டார்.
ரேஷன் அட்டைதாரர்கள் ஹேப்பி
மேலும் பொருட்களின் அளவை குறைக்கக் கூடாது. ரேஷன் கடைகளில் மக்களை அதிக நேரம் காக்க வைக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை அதிகாரிகளுக்கு அமைச்சர் வழங்கினார். ரேஷன் பொருட்களை மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு செய்வார் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளதன் மூலம் இனி ரேஷன் கடைகளில் தரம்வாய்ந்த பொருட்கள் மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களின் நீண்ட நாளைய குற்றச்சாட்டு முடிவுக்கு வர உள்ளது.