தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது, இதில் சுமார் 97 லட்சம் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது. பொதுமக்கள் தங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்த்து, பெயர் விடுபட்டிருந்தால் ஜனவரி 18, 2026 வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
தமிழகத்தில் தேர்தல் ஆணையம் நடத்திய எஸ்.ஐ.ஆர். பணிகளைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.
2026-ஆம் ஆண்டு நடைபெறும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் (SIR) தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளன. கடந்த நவம்பர் 4-ஆம் தேதி முதல் வீடு வீடாகச் சென்று படிவங்கள் வழங்கும் பணி நடைபெற்றது. படிவங்களைப் பெற சிறப்பு முகாம்களும் நடைபெற்றன.
24
மாவட்ட வாரியாக வெளியீடு
டிசம்பர் 11-ஆம் தேதியுடன் படிவங்களை சமர்ப்பிக்கதற்கான அவகாசம் முடிந்தது. அதைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்று மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளதோடு, இதில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் விவரங்களும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் சுமார் 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், விவரங்களைப் பூர்த்தி செய்யும்போது ஏற்பட்ட பிழைகளாலோ அல்லது கவனக்குறைவாலோ தனது பெயர் பட்டியலில் இருந்து விடுபட்டிருக்குமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
34
பெயர் இருக்கிறதா? இல்லையா?
இது குறித்து விளக்கம் அளித்துள்ள தேர்தல் அதிகாரிகள், வரைவுப் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் அல்லது கண்டறிய இயலாத முகவரியில் இருப்பவர்கள் போன்ற விவரங்களை அந்தந்த மாவட்டத் தேர்தல் அதிகாரிகளின் இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம் என்று கூறியுள்ளனர். பொதுமக்கள் தங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்து, பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்துகொள்ள முடியும்.
ஒருவேளை வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால் அல்லது பெயர் நீக்கப்பட்டதற்கான காரணத்தில் ஆட்சேபனைகள் இருந்தால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. இதற்கான திருத்தங்களை மேற்கொள்ளவும், விடுபட்ட பெயர்களைச் சேர்க்கவும் இன்று முதல் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 18-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் பொதுமக்கள் தங்களது உரிமை கோரல்கள் மற்றும் மறுப்புரைகளை உரிய படிவங்கள் மூலம் சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.