Chennai Electric Buses: சென்னையில் பொதுப்போக்குவரத்தை மேம்படுத்த, புதிய தாழ்தள மின்சார மற்றும் குளிர்சாதனப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள், பெண்கள், முதியோர்கள் எளிதில் பயன்படுத்தும் வகையிலான சிறப்பு அம்சங்கள் உள்ளன.
உலகின் முக்கியமான நகரமாக உருவாகி வரும் சென்னையில் பொதுமக்கள் அனைவரும் பொதுப்போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள், தாழ்தள மின்சாரப் குளிர்சாதனப் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தரையில் இருந்து 40 செ.மீட்டர் (400 மி.மீ) உயரம் கொண்ட தாழ்தள மின்சார பேருந்தின் உயரத்தை, தேவையான நேரத்தில் பேருந்து ஓட்டுநர் 25 செ.மீட்டர் (250 மி.மீ) உயரம் வரை குறைத்து மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் பேருந்துகளில் எளிதாக ஏறி, இறங்க வசதி செய்யப்பட்டுள்ளது.
24
புதிய தாழ்தள பேருந்துகளின் சிறப்பு அம்சங்கள்
பயணிகள் எளிதாக அமரும் வகையில் இருக்கைகள் ஒரே சமதளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தாழ்தள மின்சாரப் பேருந்துகளில் இருக்கைகளின் பக்கவாட்டு இடைவெளி 65 செ.மீட்டருக்கு (650 மி.மீ.) பதிலாக 70 செ.மீட்டர் (700 மி.மீ) அகலம் உள்ளதால், நின்று செல்லும் பயணிகளுக்கு வசதியாக இருக்கும். மேலும், மகளிருக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்திடும் வகையில், தாழ்தள மின்சாரப் பேருந்துகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. புதிய தாழ்தள மின்சார குளிர்சாதனப் பேருந்துகளில் விருப்பம் போல் பயணம் செய்ய மாதாந்திர பயணச் சீட்டு ரூ.2,000 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
34
125 பேருந்துகளின் வழித்தட விபரங்கள்
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பூவிருந்தவல்லியிலிருந்து - அண்ணா சதுக்கம் செல்லும் 25 எண் வழித்தடத்தில் 10 டீலக்ஸ், 10 ஏ.சி பேருந்துகள், பூவிருந்தவல்லியிலிருந்து – பிராட்வே செல்லும் 54 எண் வழித்தடத்தில் 10 ஏ.சி பேருந்துகள், பூவிருந்தவல்லியிலிருந்து – தியாகராயநகர் செல்லும் 154 எண் வழித்தடத்தில் 10 டீலக்ஸ் பேருந்துகள், பூவிருந்தவல்லியிலிருந்து – செங்குன்றம் செல்லும் 62 எண் வழித்தடத்தில் 15 டீலக்ஸ் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அதேபோல் மேலும் பூவிருந்தவல்லியிலிருந்து கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT) செல்லும் 66 P வழித்தடத்தில் 15 டீலக்ஸ் பேருந்துகள், பூவிருந்தவல்லியிலிருந்து – திருவான்மியூர் செல்லும் 49 X வழித்தடத்தில் 5 டீலக்ஸ், 5 ஏ.சி பேருந்துகள், பூவிருந்தவல்லியிலிருந்து – பிராட்வே செல்லும் 101CT வழித்தடத்தில் 20 ஏ.சி பேருந்துகள், பிராட்வேயிலிருந்து – திருமழிசை செல்லும் 101X வழித்தடத்தில் 5 டீலக்ஸ் பேருந்துகள், பூவிருந்தவல்லியிலிருந்து – திருவள்ளூர் செல்லும் 597A வழித்தடத்தில் 10 டீலக்ஸ் பேருந்துகள், பூவிருந்தவல்லியிலிருந்து -சுங்குவார்சத்திரம் செல்லும் 578 எண் வழித்தடத்தில் 10 டீலக்ஸ் பேருந்துகள் என 214.50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 45 புதிய தாழ்தள மின்சார குளிர்சாதனப் பேருந்துகள் மற்றும் 80 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் இயக்கத்தை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.