
தமிழகத்தை உலகளாவிய முதலீட்டு மையமாக மாற்றும் நோக்கில், முதல்வர் ச. ஜோசப் விஜய் மேற்கொண்ட இங்கிலாந்து பயணம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது என்று தமிழக அரசு இன்று தெரிவித்துள்ளது. 2036-ம் ஆண்டுக்குள் தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்பது அரசின் இலக்கு. இதற்காக, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் செப்டம்பர் 10-ம் தேதி முதல்வர் இங்கிலாந்து சென்றார்.
'வெற்றி' தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026-ல், ரூ.67,452 கோடி மதிப்பிலான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் 1,06,998 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அரசு பொறுப்பேற்ற முதல் 100 நாட்களிலேயே 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்து சாதனை படைத்துள்ளது. லண்டனில் செப்டம்பர் 12-ம் தேதி, இங்கிலாந்துக்கான இந்திய தூதர் குமரன் பெரியசாமியை முதல்வர் சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியா-இங்கிலாந்து இடையிலான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் மூலம் தமிழகத்துக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
செப்டம்பர் 14-ம் தேதி லண்டனில் முதல்வர் முன்னிலையில், ரூ.15,300 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் விருப்பக் கடிதங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் 10,000-க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன. இதில் முக்கியமாக, சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனம், தனது ஐரோப்பிய மற்றும் பிரிட்டிஷ் கூட்டாளர்களுடன் இணைந்து சுமார் ரூ.11,000 கோடி முதலீடு செய்ய முன்வந்துள்ளது. சேஸிஸ், இன்ஜினியரிங், உற்பத்தி மற்றும் கிடங்கு வசதிகளை அமைக்கும் இந்த மாபெரும் திட்டத்தால் 7,000 பேருக்கு வேலை கிடைக்கும். இதுமட்டுமின்றி, முன்னணி ஐரோப்பிய வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று, இந்தியாவில் ரூ.3,000 கோடி முதலீடு செய்ய தமிழகத்தையே தேர்வு செய்துள்ளது. இதற்கான விருப்பக் கடிதத்தை 'கைடன்ஸ் தமிழ்நாடு' அமைப்பிடம் அந்த நிறுவனம் வழங்கியுள்ளது.
தொழில்நுட்பத் துறையை பொறுத்தவரை, எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனம் சென்னையில் புதிதாக அறிவிக்கப்பட்ட மவுண்ட்-பூந்தமல்லி GCC காரிடாரில், BOTT மாடலில் ஒரு உலகளாவிய திறன் மையத்தை அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.1,000 கோடி முதலீட்டிலான இந்த திட்டத்தால் 2,000 பேருக்கு அதிக சம்பளத்துடன் கூடிய வேலைகள் கிடைக்கும். ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குரூப், தனது இந்திய கிளை நிறுவனமான ஸ்ரீயா சொல்யூஷன்ஸ் மூலம் திருச்சி மற்றும் சென்னையில் தனது GCC மையங்களை விரிவுபடுத்துகிறது. இதனால் எம்படட் சிஸ்டம்ஸ் மற்றும் எலக்ட்ரிஃபிகேஷன் துறையில் 600 பேருக்கு வேலை கிடைக்கும். அதேபோல, இங்கிலாந்தைச் சேர்ந்த வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனம் திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.300 கோடி முதலீடு செய்து 400 வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளது.
இந்துஜா குழுமத்தின் நிர்வாகிகளான அசோக் லேலண்ட் எம்.டி தீரஜ் இந்துஜா மற்றும் ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எம்.டி பிரகாஷ் பி. சாப்ரியா ஆகியோரையும் முதல்வர் சந்தித்துப் பேசினார். 'வெற்றி' மாநாட்டில் கையெழுத்தான ரூ.2,500 கோடி முதலீட்டுக்கான முன்னேற்றங்கள் குறித்து அவர்கள் முதல்வரிடம் விளக்கினர். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, குறிப்பாக காற்றாலை மின்சாரம் மற்றும் தமிழகத்தில் உற்பத்தியாகும் வர்த்தக வாகனங்களின் ஏற்றுமதியை அதிகரிக்கவும் இந்த குழுமம் ஆர்வம் காட்டியுள்ளது.
தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படும் என்று செப்டம்பர் 3-ம் தேதி சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் அறிவித்திருந்தார். அதற்கேற்ப, இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டையும் அவர் நேரில் பார்வையிட்டார். அங்குள்ள ரேஸ் கண்ட்ரோல், சர்க்யூட் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை ஆய்வு செய்த அவர், நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் பங்கேற்ற 2026 மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழக நகை மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கான மூலப்பொருட்கள் கொள்முதல், ஓசூருக்கு இங்கிலாந்து விண்வெளி மற்றும் பாதுகாப்பு குழுவினரின் வருகை, அக்டோபரில் சென்னைக்கு NEMSA குழுவினரின் வருகை, நிதிச் சேவைகளில் திறன் மேம்பாட்டு கூட்டாண்மை ஆகியவை குறித்தும் இந்த பயணத்தில் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டன. இங்கிலாந்தில் தனக்கு சிறப்பான வரவேற்பு அளித்த தமிழ் மக்களுக்கு முதல்வர் நன்றி தெரிவித்தார். அதேசமயம், லண்டன் போலீஸார் அனுமதி மறுத்ததால், திட்டமிட்டபடி அங்குள்ள தமிழர்களை நேரில் சந்தித்துப் பேச முடியாதது குறித்து அவர் தனது வருத்தத்தையும் பதிவு செய்தார்.
CM Vijay : திமுகவை சிக்க வைக்கும் 3 ஃபைல்ஸ்? சட்டசபையில் விஜய் பேசியது என்ன?