தவெக கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றம் நாளை முக்கிய உத்தரவினை பிறப்பிக்க உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
தவெக தலைவர், நடிகர் விஜயின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது இந்தியா முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்குகளை கையில் எடுத்த உயர்நீதிமன்றம், இது குறித்து முழுமையாக விசாரிக்க அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு விசாரணை அமைத்து உத்தரவிட்டார். மேலும் நீதிபதி செந்தில் குமார் தவெக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
24
உச்சநீதிமன்றத்தில் விசாரணை
உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தவெக உச்சநீதிமன்றம் சென்றது. மேலும் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட சில குடும்பங்களும் கரூர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என மனுதாக்கல் செய்தனர். அனைத்து மனுக்களையும் விசாரித்த நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி. அஞ்சரியா அடங்கிய அமர்வு, உயர்நீதிமன்றத்துக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது.
அடுக்கடுக்கான கேள்விகள்
தேர்தல் பிரச்சார நெறிமுறை தொடர்பான வழக்கில், விஜய் தொடர்பான கருத்துகளை உயர்நீதிமன்றம் ஏன் முன்வைத்தது? அது கிரிமினல் வழக்காக மாற்றப்பட்டது எப்படி? மதுரை கிளைக்கு ஒதுக்கப்பட்ட வழக்கை சென்னை கிளை ஏன் விசாரித்தது? விஜய் தரப்பினரின் வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பித்தது ஏன்? என பல்வேறு கேள்விகளை உச்சநீதிமன்றம் எழுப்பியது.
34
சிபிஐ விசாரணை வேண்டும்
கரூர் சம்பவம் நடந்த உடன் ஒரே இரவில் 30 உடல்களை பிரேத பரிசோதனை செய்துள்ளனர். அதிகாலை 3 மணிக்கு அனைத்து உடல்களும் எரிக்கப்பட்டுள்ளன. 30 உடல்களை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவர்கள் உடனடியாக எங்கிருந்து வந்தனர்? என்ற கேள்வியை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் முன்வைத்தனர். மேலும் மாநில போலீஸ் விசாரித்தால் உண்மை வெளிவராது. ஆகவே சிபிஐ விசாரிக்க வேண்டும் என வாதிடப்படது.
தமிழக அரசு விளக்கம்
இதற்கு தமிழ அரசு சார்பில் 'விஜய் தாமதமாக வந்ததே விபத்துக்கு காரணம். இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வு விசாரணை சிறப்பாக நடைபெறுவதால் சிபிஐ விசாரணை தேவையில்லை' என்று கூறியதுடன் போஸ்ட் மார்ட்டம் உள்ளிட்ட சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளை (திங்கட்கிழமை) ஒத்திவைத்தனர்.
தமிழ்நாடே எதிர்பார்க்கும் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாளை சிறப்பு புலனாய்வு விசாரணையை ரத்து செய்து விட்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடலாம். அல்லது சிறப்பு புலனாய்வு விசாரணையே தொடரும் என்றும் கூறலாம். விஜய் மற்றும் தவெக மீதான குற்றச்சாட்டுகளை தீர்க்கும் வகையில் புதிய வழிகாட்டுதல்கள் வழங்கலாம்.