தமிழகத்தில் இந்து கோவில்கள் திமுக குண்டர்களாலும், இந்து வெறுப்பாளர்களாலும் தாக்கப்படுகின்றன. இது நிறுத்தப்படவில்லை என்றால் மத்திய அரசு அரசியலமைப்பை வலியுறுத்தி திமுக அரசை கலைக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி எச்சரித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலைக்கு உரிமை கொண்டாடும் மதவாத அமைப்புகள்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோவிலுக்கு சற்று தொலைவில் தர்காவும் அமைந்துள்ளது. இதனால் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தவிர்க்கப்பட்டு வந்தது. இதற்கு பதிலாக உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றப்படுவது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த ஆண்டு தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று ராம ரவிக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கினார். மேலும் தீபம் ஏற்ற காவல் துறையினர் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். ஆனால் இதனை எதிர்த்து கோவில் தரப்பிலேயே மேல்முறையீடு செய்யப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது. மேலும் இந்துசமய அறநிலையத்துறை சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது.
23
144 தடை உத்தரவு
இதனடையே கோவில் வளாகத்தில் இருந்து காடா துணி, தீப கொப்பரை, நெய் உள்ளிட்ட பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன. ஆனால் தீபத்தூணுக்கு பதிலாக வழக்கம் போல உச்சிப்பிள்ளையார் கோவிலிலேயே தீபம் ஏற்றப்பட்டதால் இந்து முன்னணி, இந்து அமைப்புகள் ஆத்திரம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து காவல் துறையினரின் எதிர்ப்பையும் மீறி கார்த்திகை தீபம் ஏற்ற இந்து அமைப்புகள் தடுப்புகளை உடைத்து மலையேற முயன்றனர்.
இதனால் திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. சூழலை உணர்ந்த மாவட்ட ஆட்சியர் திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பக்கப்பட்டு கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டது. மேலும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதாக இந்து அமைப்புகள் மத்திய பாதுகாப்பு படையுடன் வந்ததால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் 144 தடை உத்தரவை காரணம் காட்டி யாரையும் மலையில் ஏற அனுமதிக்க முடியாது என்று கூறி திருப்பி அனுப்பினர்.
33
திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்..
இந்த வழக்கு தொடர்பான விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபதி அமர்வில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டில், இந்து கோவில்கள் திமுக குண்டர்களாலும், பிற இந்து வெறுப்பாளர்களாலும் தாக்கப்படுகின்றன. இது நிறுத்தப்பட வேண்டும், இல்லையெனில் மத்திய அரசு அரசியலமைப்பை வலியுறுத்தி திமுக அரசாங்கத்தை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.