
நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைப் திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் கர்நாடகாவில் கமலுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகிறது. தக்லைப் திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என கர்நாடக அமைப்புகள் அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தமிழ்த் திரைப்படங்களை கடந்து இந்திய அளவிலும், அகில உலக அளவிலும் தனது படைப்புகளின் வாயிலாக தனி முத்திரை பதித்த ஒரு மூத்த கலைஞர். திரைப்படங்களையே தனது சுவாசமாகவும், உணர்வாகவும், உயிராகவும் சுமந்து வாழும் மகத்தான ஒரு படைப்பாளர்.
அந்த வகையில், அவருக்கும் கிரிஷ் கர்னாட்டுக்கும் உள்ள நட்பும் அவர் எழுத்தின் மேல் இருக்கும் பெரும் ஈடுபாடும் அனைவரும் அறிந்ததே. அவரது 'ராஜ்கமல் பிலிம்ஸ்' நிறுவனத்தின் முதல் தயாரிப்பான 'ராஜ பார்வை' திரைப்படத்தை ஆழ்ந்த சகோதர பாசத்துடன் முன் நின்று 'கிளாப்' அடித்து துவக்கி வைத்தவர் கன்னட திரை உலகின் ஈடில்லா உச்ச நட்சத்திரமாக திகழ்ந்த பத்மபூஷன், தாதா சாகிப் பால்கே, கர்நாடக ரத்னா, அமரர், டாக்டர்.ராஜ்குமார் அவர்கள் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.
பின்னாளில், துரதிஷ்டவசமாக டாக்டர்.ராஜ்குமார் அவர்கள் கடத்தப்பட்ட சமயத்தில், அதை கண்டித்தும், அவரை மீட்க வேண்டியதை வலியுறுத்தியும் நடத்தப்பட்ட போராட்டங்களில் முதல் குரலாக ஒலித்து முன் நின்றவர்களில் கமல்ஹாசன் அவர்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றியதை எவரும் மறுக்க இயலாது.
கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர்.ராஜ்குமார் அவர்களைத் தனது உடன் பிறவா மூத்த சகோதரராகவும், அவரது புதல்வர் சிவராஜ்குமார் அவர்களைத் தனது மகனுக்கு இணையாகவும், கன்னட மக்களைத் தனது குடும்பமாகவும் கருதுபவர் கமல்ஹாசன், மிக சமீபத்தில் உடல் நலிவுற்று சிகிச்சை பெற்ற சிவராஜ்குமார் அவர்கள் மீது கமல்ஹாசன் கொண்ட அதீத அக்கறையின் வெளிப்பாடாக, அவரை தொடர்பு கொண்டு விசாரித்து ஊக்கம் அளித்ததை மிக நெகிழ்ச்சியுடன் 'தக் லைஃப்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவராஜ்குமார் அவர்களே நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தது அனைவரையும் கண்கலங்கச் செய்தது. அந்த நெகழ்ச்சியின் தாக்கம் குறையாமல் அடுத்து மேடையேறிய கமல்ஹாசன் அவர்கள்,
டாக்டர்.ராஜ்குமார் தனக்கு மூத்தவர் என்றும், அவர்தம் குடும்பத்தில் அவருக்குப் பின் தன்னை ஒரு குடும்ப உறுப்பினராக நிறுத்தியும், சிவராஜ்குமார் அவர்கள் அந்தக் குடும்பத்தில் தனக்குப் பின் வந்த இளையவர் என்பதையும் பேரன்போடும், உரிமையோடும் சுட்டிக் காட்டும் விதமாக, 'அவர் குடும்பத்தில் தமிழனான எனக்குப் பின் தான் கன்னடரான சிவராஜ்குமார் தோன்றினார்' என்னும் பொருள்பட பேசினார்.
சிவராஜ்குமார் அவர்கள் மீண்டு வந்ததை கண்ட மகிழ்ச்சியில் கமல்ஹாசன் அவர்கள் வெளிப்படுத்திய அந்த வார்த்தைகளுக்கு குறிப்பிட்ட ஒரு சிலர் தவறாக அர்த்தம் புரிந்து கொண்டது மட்டுமில்லாமல் அந்த தவறான புரிதலை தீயென வேகமாக பரப்பியும் வருகின்றனர். அதனால் தேவையற்ற சங்கடமான சூழலையும் பதட்டத்தையும் ஏற்படுத்துகிறது. இந்திய மொழிகள் அனைத்திற்குமே உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வரும் கமல்ஹாசன்,
ஒருமைப்பாட்டின் குரலாகவும், சகோதரத்துவத்தின் அடையாளமாகவும் திகழ்ந்து வருபவர். அதன் வெளிப்பாடாகவே 'கர்நாடகா கமல்ஹாசன் நற்பணி இயக்கம்' மூலமாக நாற்பதாண்டுகளுக்கும் மேலாக கர்நாடக மாநிலத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளையும் முன்னெடுத்து வருகிறார். என்றும் கன்னட மொழியை சீர்தூக்கி பார்க்கின்ற கமல் அவர்களுக்கு ஒருபோதும் சிறுமைப்படுத்தும் நோக்கம் இருந்ததில்லை என்பதை அவருடைய கடந்த கால நிகழ்வுகள் தரவுகளாக இருக்கின்றன.
சுய ஆதாயங்களுக்காக, குறிப்பிட்ட சிலர் கமல் ஹாசன் அவர்களை கருவியாக பயன்படுத்தி கன்னட - தமிழ் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி செய்ய அனுமதிப்பது மிகத் தவறான முன்னுதாரணமாகவும், வரலாற்றில் ஒரு மாபெரும் கருப்புப்புள்ளியாகவும் நிலைத்து விடக்கூடும்.
கர்நாடக மாநிலத்தின் அனைத்து அன்பர்களும், திரைத்துறை அமைப்புகளும், அரசியல் அமைப்புகளும் கமல்ஹாசன் அவர்களது உள்ளார்ந்த அன்பின் வெளிப்பாடாக உதிர்த்த வார்த்தைகளின் உண்மையான பொருளை உணர்ந்து, ஒரு மகத்தான கலைஞனுக்கு எதிராகத் திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறுகளைத் தடுத்து நிறுத்த முற்பட வேண்டும் என, தமிழ்த் திரையுலகத்தின் சார்பாக 'தென்னிந்திய நடிகர் சங்கம்' பேரன்புடன் கோரிக்கை வைக்கிறோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.