அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்குகளில் இருந்து தப்பிக்க முடியாது என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தேர்தல் வரை அவர் இப்பகுதியில் இருப்பதே சந்தேகம் என்றும் சாடியுள்ளார்.
தி.மு.க. அமைச்சர் செந்தில் பாலாஜி மீதுள்ள வழக்குகளில் இருந்து அவர் ஒருபோதும் தப்பிக்க முடியாது என்றும், வரவிருக்கும் தேர்தல் காலம் வரை அவர் இந்தப் பகுதியில் இருப்பாரா என்பதே சந்தேகத்துக்குரியது என்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாகப் பேசியுள்ளார்.
தருமபுரியில் இன்று பரப்புரையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, செந்தில் பாலாஜியைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
24
தேர்தல் வரை இருப்பீர்களா என்பதே சந்தேகம்!
"செந்தில் பாலாஜி அவர்களே! உங்கள் மீது இருக்கும் குற்றச்சாட்டிலிருந்து நீங்கள் ஒருபோதும் தப்பிக்கவே முடியாது. அந்த அளவுக்கு வலிமையான ஆதாரங்களோடு நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது." என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மேலும், "இப்போது நீங்கள் இந்தப் பகுதியில் வீறுநடை போட்டுக்கொண்டு இருக்கலாம். ஆனால், நீங்கள் வரவிருக்கும் தேர்தல் காலம் வரை இந்தப் பகுதியில் இருப்பீர்களா என்பதே சந்தேகத்துக்குரியது!" என்று எடப்பாடி பழனிசாமி சவால் விடுவது போலப் பேசினார்.
34
செந்தில் பாலாஜிக்கு ஏன் பயம்?
கரூர் துயரச் சம்பவம் குறித்துசெந்தில் பாலாஜி பதற்றத்துடன் காணப்படுவதாகவும் பழனிசாமி குற்றம் சாட்டினார்.
“மடியில் கனம் இல்லை என்றால், வழியில் ஏன் பயம் இருக்க வேண்டும்? மடியில் கனம் இல்லை, வழியில் பயம் இல்லை என்றுதானே இருக்க வேண்டும். ஆனால், கரூர் விவகாரம் தொடர்பாக செந்தில் பாலாஜி ஏன் இவ்வளவு பதறுகிறார்? அவர் முகத்தில் பயம் தெளிவாகத் தெரிகிறது" என்றும் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகக் கூறினார்.
“தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில், உரிய பாதுகாப்பு வசதிகள் அளிக்கப்படாத காரணத்தால் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் காரணமாக இன்று தமிழ்நாடே தலைகுனிந்து நிற்கிறது” என்றும் இ.பி.எஸ். தெரிவித்தார்.
“அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கியிருந்தால், 41 உயிர்கள் காக்கப்பட்டிருக்கும். எனவே, இந்தக் கோர உயிரிழப்புகளுக்கு ஆளும் தி.மு.க. அரசுதான் முழுப் பொறுப்பேற்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.