அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யின் தவெகவில் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்தார். அவருக்கு தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் என்ற முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த சில வாரங்களாக தவெகவில் இணையப் போவதாகவே செய்திகள் பரவின. அதை உறுதிப்படுத்தும் வகையில், அவர் நேற்று (நவம்பர் 26) விஜயை நேரில் சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். இதற்கு தொடர்ச்சியாக இன்று காலை 10 மணிக்கு பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். காலை முதலே தவெக நிர்வாகிகள் மற்றும் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டு வருகை புரிந்தனர்.
26
செங்கோட்டையனுக்கு முக்கிய இடம்
விஜயை சந்தித்த பின், நிர்வாகிகளின் முன்னிலையில் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். அவருக்கு உடனடியாக தவெக தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் என்ற முக்கிய பொறுப்பு, ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்ட அமைப்பு செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. இதனுடன், முன்னாள் எம்.பி. சத்யபாமா உட்பட 50-க்கும் மேற்பட்டோரான செங்கோட்டையன் அணியின் முக்கிய ஆதரவாளர்களும் தவெகவில் இணைந்தனர். சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவின் முக்கிய முகமாக இருந்த செங்கோட்டையன் புதிய அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பது, தமிழக அரசியலில் பெரிய மாற்றமாக கருதப்படுகிறது.
36
எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன் மோதல்
செங்கோட்டையனுக்கும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடுகள் வெளிப்படையாக இருந்தன. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க 10 நாட்கள் அவகாசம் வழங்கிய செங்கோட்டையனின் நடவடிக்கை, அரசியல் வட்டாரத்தில் மேலும் பதட்டமடையச் செய்தது. இதற்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் பதவி வகித்த அனைத்து உயர்பதவிகளிலிருந்தும் அவரை நீக்கினார். பின்னர் அவர் அடிப்படை உறுப்பினராக மட்டுமே இருந்த நிலையில், கடந்த அக்டோபரில் ஓபிஎஸ்–டிடிவி தினகரன் நிகழ்வில் கலந்து கொண்டதற்கு காரணம் காட்டி, அவரை அதிலிருந்தும் நீக்கினார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் கூட்டமைப்பு, நிர்வாக வலிமையை அதிகரிக்கும் பணியில் தீவிரமாக உள்ளன. இந்த சூழலில், அதிமுக தலைமையுடன் ஏற்பட்ட மோதலால் நீக்கப்பட்ட செங்கோட்டையன் அடுத்ததாக எந்த கட்சியில் சேரப்போகிறார் என்பது பெரும் விவாதமாக இருந்தது. பாஜக, திமுக என்ற கணிப்புகளைத் தாண்டி, யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் நடிகர் விஜய்யின் தவெகவில் இணைந்திருப்பது, அரசியல் வட்டாரத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை சபாநாயகரிடம் எம்.எல்.ஏ. ராஜினாமா கடிதத்தை அளித்து, அதன்பிறகு விஜயை சந்தித்து மூன்று மணி நேரத்துக்கும் மேற்பட்ட ஆலோசனையின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
56
செங்கோட்டையன்–விஜய் கூட்டணி
தமிழக அரசியல் பரப்பில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகத்தில் இணைந்திருப்பது பல்வேறு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. 1972-ல் எம்.ஜி.ஆர் எழுச்சியைப் கணித்தவர், 1989-ல் ஜெயலலிதாவின் அரசியல் உயர்வையும் துல்லியமாக கூறியவர் என்பதால், செங்கோட்டையன் விஜயை பற்றி கணிக்கிறார் என்ற கணிப்பு கூடுதல் ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. “செங்கோட்டையன் விஜயுடன் சேர்ந்தால், ஒரு பெரிய அரசியல் மேஜிக் நிகழும்” என பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
66
தவெகவின் புதிய வலிமை
ஒருபுறம், தவெக நிர்வாகத்தில் இளைய தலைமுறையினரான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போன்றோரின் கீழ் செங்கோட்டையன் பணியாற்ற வேண்டியிருப்பது அவரது அரசியல் செல்வாக்கு சவாலாகவே உள்ளது எனவும் சிலர் விமர்சிக்கின்றனர். ஆனால் அதே சமயம், அனுபவமிக்க தலைவரான செங்கோட்டையன் தவெகவில் இணைவது, கட்சிக்கு பெரிய பலம் சேர்க்கும் எனும் வாதமும் பலரிடையே நிலவி வருகிறது. சில அரசியல் கணிப்புகள், “செங்கோட்டையன் விஜயுடன் இணைந்தால், தேசிய ஜனநாயக கூட்டணி பலவீனப்படும். இதன் மூலம் விஜயின் அரசியல் கை வலுப்படும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.