பதவி பறிக்கப்பட்டதையடுத்து, செங்கோட்டையன் தனது சொந்த ஊரான கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள இல்லத்தில் தொடர்ந்து முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களும் அமமுகவினர் சிலரும் பங்கேற்றதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், நேற்று (செப். 24) அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை செங்கோட்டையன் சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியதாகவும், இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததாகவும் ஒரு தகவல் வெளியானது. ஆனால், இந்தத் தகவலைச் செங்கோட்டையன் மறுத்துவிட்டார்.
இன்று கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், “சென்னையில் அரசியல் ரீதியாக நான் யாரையும் சந்திக்கவில்லை. அதிமுகவின் ஒருங்கிணைப்புக் குறித்து யாரிடமும் நான் பேசவில்லை. அதுபோன்ற செய்திகள் வந்தவுடன் பல்வேறு தொலைக்காட்சிகளுக்கு இதுகுறித்து விளக்கமளித்தேன். நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன்,” என்று தெரிவித்தார்.