திமுகவில் உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் திமுக பொதுக்குழுவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் திமுக- அதிமுக ஆகிய இரு கட்சிகள் மட்டுமே கடந்த அரை நூற்றாண்டு காலமாக மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது. தமிழகத்தில் பலம் பொருந்திய கட்சியான திமுகவின் அடிப்படை கட்டமைப்பு பலம் வாய்ந்ததாக உள்ளது. கிளைக்கழகம் முதல் மாநில நிர்வாகிகள் வரை தலைமையின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். அந்த வகையில் திமுக தலைவராக கருணாநிதி சுமார் 50ஆண்டுகள் பதவி வகித்து வந்தார். இவரது மறைவிற்கு பிறகே திமுக தலைவராக ஸ்டாலின் பதவியை அடைந்தார்.
25
அரசியலில் உதயநிதி
இதற்கு முன்னதாக இளைஞர் அணி நிர்வாகி, துணை பொதுச்செயலாளர், பொருளாளர், செயல் தலைவர் என பதவி விகித்து வந்த ஸ்டாலின் 2018 ஆண்டு இறுதியில் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த கால கட்டத்தில் தான் அரசியலில் நுழைந்தார் திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி, திரைப்படங்கள் தயாரிப்பது, நடிப்பது என பணியாற்றி வந்த உதயநிதி 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகம் முழுவதும் சுற்றி வந்தார். உதயநிதியின் பிரச்சாரம் மக்களை வெகுவாக கவர்ந்தது.
35
7ஆண்டுகளில் துணை முதல்வர் பதவி
இதனையடுத்து நாடாளுமன்ற தேர்தல் முடிவில் 39 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து தேர்தல் வெற்றிக்கு பரிசாக உதயநிதிக்கு 2019ஆம் ஆண்டு நேரடியாக இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
அடுத்ததாக 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் வெற்றி பெற்றவருக்கு ஓராண்டு கழித்து இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. அடுத்த சில மாதங்களில் துணை முதலமைச்சர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உதயநிதிக்கு அடுத்தாக மீண்டும் பதவி உயர்வு வழங்கும் வகையில் திமுகவில் துணை பொதுச்செயலாளர் பதவி வழங்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலமே உள்ள நிலையில், உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் வருகிற ஜூன் 1ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள திமுக பொதுக்குழுவில் இந்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
ஏற்கனவே திமுக துணை பொதுச்செயலாளர்களாக ஐ.பெரியசாமி, ஆ ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் உள்ளனர். இதில் யாராவது ராஜினாமா செய்தால் மட்டுமே உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் வாய்ப்பு கிடைக்கும்.
55
திமுக பொதுக்குழுவில் என்ன நடக்கும்?
மேலும் திமுகவில் முழு நேர அரசியலில் இறங்கி சுமார் 7 வருடங்களுக்குள் இளைஞர் அணி செயலாளர் பதவி, அமைச்சர் பதவி, துணை முதலமைச்சர் பதவி என அடுத்தடுத்து பதவிகள் வழங்கி வரும் நிலையில் மீண்டும் ஒரு பெரிய பதவி வழங்குவதை திமுகவின் மூத்த தலைவர்களே விரும்பவில்லையென கூறப்படுகிறது. எனவே இன்னும் ஒரு வார காலத்தில் நடைபெறவுள்ள திமுக பொதுக்குழு கூட்டத்தில் என்ன முடிவெடுக்கப்போகிறார்கள் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.