School Education Department: அதெல்லாம் உண்மையில்லை! நம்பாதீங்க! அலறும் பள்ளிக்கல்வித்துறை! நடந்தது என்ன?

First Published | Nov 14, 2024, 9:01 PM IST

தர்மபுரி மாவட்டத்தில் ஆசிரியர் ஒருவர் தனக்கு பதிலாக வேறொரு நபரை வைத்து பாடம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து 10,000 போலி ஆசிரியர்கள் பணிபுரிவதாக வெளியான செய்தியை பள்ளிக்கல்வித்துறை மறுத்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டம் இராமியம்பட்டி நடுநிலைப்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த பாலாஜி ஒழுங்காக பள்ளிக்கு வராமல்  தனக்கு பதிலாக வேறொரு நபரை கொண்டு வகுப்பறையில் பாடம் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து பள்ளி கல்வித்துறையில் ஏராளமான முறைகேடுகள் நடப்பதாகவும், 10,000க்கும் மேற்பட்ட போலி ஆசிரியர்கள் பணிபுரிவதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. 


இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: கடந்த 7ம் தேதி செய்தித்தாளில் வெளிவந்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளபடி தருமபுரி மாவட்டம் அரூர் கல்வி மாவட்டத்தில் காரிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட இராமியாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்த கே.பாலாஜி என்பவர் தனக்கு பதிலாக வேறொரு நபரை கொண்டு வகுப்பறையில் பாடம் நடத்தியதால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

Latest Videos


இதையடுத்து, பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு,  ஆசிரியர்கள் கற்றல் பணிகளை மேற்கொள்ளாமல், வெளிநபரை கொண்டு மாணவர்களுக்கு கற்பித்தல் பணி நடத்துவது குறித்து,  பள்ளி ஆண்டாய்வு மற்றும் பள்ளிப் பார்வையின்போது ஏதேனும் கண்டறியப்பட்டாலோ அல்லது இது குறித்த புகார்கள் ஏதேனும் பெறப்பட்டாலோ கண்டிப்பாக அப்புகார் மீது தனிக்கவனம் செலுத்தி மாவட்டக் கல்வி அலுவலரே (தொடக்கக் கல்வி) விசாரணை மேற்கொண்டு, அவ்விசாரணையில் உண்மையிருப்பின் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு இறுதியாணை பிறப்பிக்கப்பட வேண்டும்.

பள்ளிகளில் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படும்போது அத்தகவலை மாவட்டக் கல்வி அலுவலருக்கு அளிக்கத் தவறும் பட்சத்தில், தலைமை ஆசிரியர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர் ஆகியோர் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தொடக்கக் கல்வி அலகில் தகுதியுள்ள காலி பணியிடத்தில் பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் (SMC) நியமனம் பெற்ற 6053 எண்ணிக்கையில் உள்ள தற்காலிக ஆசிரியர்கள் தவிர, வேறு ஏதேனும் நபர்கள் பணிபுரிந்து வருகிறார்களா என அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களிடமும் அறிக்கை கோரப்பட்டது.

இவ்வியக்ககச் செயல்முறைகள் அனுப்பப்பட்ட நிலையில், மாவட்டக் கல்வி அலுவலரின் ஆளுகைக்கு உட்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர்களிடமிருந்து வேறு நபர்களைக் கொண்டு கற்பித்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் குறித்த விவர அறிக்கை ஏதும் பெறப்படவில்லை. ஆகையால், மாவட்டக் கல்வி அலுவலர்களிடமிருந்து எவ்வித அறிக்கையும்
பெறப்படாத நிலையில், சமூக ஊடகங்களில் வரப் பெற்ற செய்தி முற்றிலும் உண்மைக்கு மாறான செய்தியாகும். அச்செய்திக் குறிப்பில் குறிப்பிட்டவாறு 10,000 போலி
ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் நடைபெறவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!