பாமகவில் தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி இடையே அதிகார மோதல் தீவிரமடைந்துள்ளது. இருவரும் தனித்தனியே பொதுக்குழு கூட்டங்களை அறிவித்துள்ளதால், கட்சி நிர்வாகிகள் குழப்பத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் திமுக- அதிமுக ஆகிய கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் வட மாவட்டங்களில் செல்வாக்கு உள்ள கட்சி பாமக, நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் பாமகவுடன் கூட்டணி வைத்தால் வட மாவட்டங்களில் அதிக வாக்குகளை கைப்பற்றலாம். வெற்றியும் எளிதாக கிடைக்கும் என அரசியல் கட்சிகளின் நம்பிக்கையாக உள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சியான பாமக தற்போது அதிகார மோதலால் தந்தை மகன் இடையே சிக்கி சிதறி வருகிறது. பல ஆண்டுகளாக தந்தை மகன் இடையே நடைபெற்று வந்த மோதல் கடந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது எதிரொலித்தது. அதிமுகவுடன் கூட்டணிக்கு ராமதாஸ் திட்டமிட்ட நிலையில் அன்புமணியோ பாஜகவோடு கூட்டணியை உறுதி செய்தார்.
25
ராமதாஸ்- அன்புமணி அதிகார மோதல்
நாடாளுமன்ற தேர்தலில் பாமக படு தோல்வி அடைந்த நிலையில், நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அனைவர் மத்தியிலும் ராமதாஸ்- அன்புமணி மோதல் வெளியே தெரிய தொடங்கியது. தனது பேரன் முகுந்தனை இளைஞர் அணி தலைவராக ராமதாஸ் நியமித்த நிலையில் இதற்கு மேடையிலேயே அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார்.
அடுத்ததாக தன்னை பார்க்க பனையூர் அலுவலகம் வரவும் என தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார். இதனையடுத்து இரு தரப்பிலும் சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மீண்டும் மோதல் ஏற்பட்டது. பாமகவின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி அறிவித்த ராமதாஸ், அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறினார்.
35
பாமக யாருக்கு சொந்தம்.?
அடுத்ததாக பாமக யாருக்கு சொந்தம் என இரு தரப்பிலும் மோதிக்கொண்டனர். தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் மற்றும் அன்புமணி முறையிட்டனர். அன்புமணிக்கு ஆதரவானவர்கள் ராமதாசும், ராமதாசுக்கு ஆதரவானவர்களை அன்புமணியும் அடுத்தடுத்து கட்சி மற்றும் பொறுப்பில் இருந்து நீக்கினர்.
இதனால் பாமக நிர்வாகள் எந்த பக்கம் செல்வது என தவித்து வந்தனர். இதனையடுத்து தங்களது செல்வாக்கை நிலைநாட்ட இருவரும் வட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இந்த நிலையில் தான் பாமக பொதுக்குழு கூட்டத்திற்கு அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்தார். இது தொடர்பாக பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாமக நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் உத்தரவுபடி, திண்டிவனம் - புதுச்சேரி செல்லும் வழியில் உள்ள பட்டானூர் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் வருகிற ஆகஸ்ட் 17-ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர நிர்வாகிகள் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து போட்டியாக களத்தில் இறங்கிய அன்புமணி நீங்கள் 17ஆம் தேதி தானே பொதுக்குழு கூட்டம் நடத்துகிறீங்க நான் ஒரு வாரம் முன்னதாக ஆகஸ்ட் 9ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பை அன்புமணி வெளியிட்டார்.
55
தவிக்கும் பாமக நிவாகிகள்
இது தொடர்பாக அன்புமணி மற்றும் பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் வெளியிட்ட அறிக்கையில், பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் வரும் 09.08.2025 (சனிக்கிழமை) காலை 11.00 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள கான்ஃளுயன்ஸ் (Confluence) அரங்கில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பும் போட்டி பொதுக்குழு கூட்டம் நடத்தவுள்ளதால் எந்த பக்கம் செல்வது என தெரியாமல் பாமக நிர்வாகிகள் தவித்து வருகிறார்கள்.