floods
தமிழகத்தில் பெஞ்சல் புயல் பாதிப்பு
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழையையொட்டி ஏற்பட்ட புயலால் சுமார் 50 செ.மீட்டர் அளவிற்கு மழை பல மாவட்டங்களில் கொட்டியது. இதனால் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. பல இடங்களில் வீடுகள் முற்றிலுமாக மூழ்கியது. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் வீடு, உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். அணைகளில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால் வெளியேற்றப்படும் நீரின் அளவும் உச்சத்தை தொட்டுள்ளது. எனவே பல இடங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு இன்னும் தொடர்ந்து கொண்டுள்ளது.
cyclone
மீட்பு பணி தீவிரம்
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் மாநில அரசும், தேசிய மீட்பு படையினரும் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். மேலும் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்.
இதனையடுத்து தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அதில் தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் ஃபெஞ்சல் புயல் சூறையாடி உள்ளதாகவும் இதன் காரணமாக சுமார் 1.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
modi
ஸ்டாலினிடம் பேசிய மோடி
2.11 லட்சம் ஹெக்டேர் வேளாண் நிலங்கள் வெள்ளத்தில் மூழியுள்ளதாகவும் அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார். எனவே 2000 கோடி ரூபாயை அவசர மீட்பு மற்றும் புனரமைப்பு பணிக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டார். இந்தநிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது தமிழகத்தில் பெஞ்சல் புயல் பாதிப்பால் ஏற்பட்ட சேத விவரங்களை கேட்டறிந்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினும் கன மழையால் ஏற்பட்ட சேதங்களையும் கூறியுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்புகொண்டு கேட்டறிந்தார்.
stalin modi
வெள்ள பாதிப்பு- மத்திய குழு
மாநில அரசு பேரிடர் பாதிப்பைத் திறம்பட எதிர்கொண்டு வருவதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதையும் மாண்புமிகு பிரதமரிடம் தெரிவித்து, தமிழ்நாட்டு மக்களைக் கடும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ள இந்தப் புயலின் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கி - புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள ஒன்றியக் குழுவை அனுப்பிட வேண்டும் என்ற எனது கடிதத்தைக் குறிப்பிட்டு, இது குறித்து மீண்டும் வலியுறுத்தியாக தெரிவித்துள்ளார்.
kanimozhi
பாராளுமன்றத்தில் கோரிக்கை
மேலும் தமிழ்நாட்டின் இந்தக் கோரிக்கையை பிரதமர் அவர்கள் உடனடியாகப் பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று உறுதிபட நம்புகிறேன் என அந்த பதிவில் கூறியுள்ளார். இதனிடையே தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் திமுகவினர் குரல் எழுப்பியுள்ளனர்.
ஃபெஞ்சல் மழை வெள்ள பாதிப்புகள் குறித்தும், மத்தியய அரசிடம் 2000 கோடி ரூபாய் நிவாரண நிதி கேட்டுள்ள முதலமைச்சரின் கடிதம் குறித்து விவாதிக்கவும் திமுக எம்.பிக்கள் கனிமொழி மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோர் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் அளித்துள்ளனர்.