தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்
கள்ளக்குறிச்சியை சேர்ந்த சௌந்தர்யா செய்தி துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் பல்வேறு தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளாரக பணியாற்றினார். பிரபல தொலைக்காட்சியான சத்யம், பாலிமர் மற்றும் நியூஸ் தமிழ் ஆகிய தொலைக்காட்சியில் திறமையாக பணியாற்றினார். இந்த நிலையில் கடந்த ஆண்டு சௌந்தர்யாவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார். இருந்த போதும் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை
புற்றுநோய் பாதிப்பு
மருத்துவர்களின் ஆலோசனையின் படி புற்றுநோய் பரிசோதனை மேற்கொண்டார். அப்போது யாரும் எதிராபாரத வகையில் புற்றுநோய் 4 நிலை கண்டறியப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சௌந்தர்யாவிற்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆறுதல் தெரிவித்தனர். மீண்டும் செய்தி துறையில் பணியாற்றனும் என்ற நம்பிக்கையை சௌந்தர்யாவிற்கு அளித்தனர்.
முதலமைச்சர் நிதி உதவி
இந்தநிலையில் இரத்த புற்றுநோய் சிகிச்சைக்கு பல லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனையடுத்து தொலைக்காட்சி மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றியவர்கள் பண உதவி செய்தனர். தமிழக அரசிடமும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சௌந்தர்யா சிகிச்சைக்காக 5 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்தார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
இந்த உதவியின் மூலம் கடந்த ஓராண்டாக சிகிச்சை பெற்று வந்த சௌந்தர்யாவிற்கு இரத்த புற்றுநோய் பாதிப்பு முற்றிய நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவிற்கு தொலைக்காட்சியில் பணியாற்றும் ஊழியர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது உடல் அடக்கம் நாளை கள்ளக்குறிச்சியில் நடைபெறவுள்ளது.