பாமகவில் தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி இடையே உட்கட்சி மோதல் வலுத்துள்ளது. இதன் விளைவாக, சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பதவியிலிருந்து ஜி.கே. மணியை நீக்கிய அன்புமணி, அப்பதவிக்கு எஸ்.பி. வெங்கடேஸ்வரனை நியமித்துள்ளார்.
பாமகவில் உட்கட்சி மோதல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தந்தை மகனான ராமதாஸ்- அன்புமணி இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனையடுத்து ராமதாசுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பாமகவின் மூத்த தலைவராக உள்ள ஜி.கே.மணியை நீக்கி அன்புமணி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவுவிற்கு பாமக தலைவர் அன்புமணி எழுதியுள்ள கடிதத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியில் அலுவலகத்தில் எனது முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
24
ஜி.கே.மணி நீக்கம்
அந்தக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பதவியிலிருந்து ஜி.கே.மணி அவர்களை விடுவித்து, புதிய தலைவராக தருமபுரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திரு எஸ்.பி. வெங்கடேஸ்வரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவர் பதவிக்கு மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் திரு. சதாசிவம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய கொறடாவாக மயிலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. சி.சிவக்குமார் அவர்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
34
புதிய தலைவர் நியமனம்
அதைத் தொடர்ந்து எனது தலைமையில் நடைபெற்ற பட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் தலைமைக் குழு கூட்டத்தில் சட்டப்பேரவைக் குழுவின் புதிய நிர்வாகிகள் தேர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஆவணங்களில் இந்த மாற்றங்களை பதிவு செய்து, உரிய ஆணைகளை விரைந்து பிறப்பிக்க வேண்டும் என்று தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
சபாநாயகருக்கு அன்புமணி எழுதிய மற்றொரு கடிதததில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொறடாவாக செயல்பட்டு வந்த சேலம் மேற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. இரா. அருள் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலும்,
கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்ததற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கடந்த ஜூலை 2-ஆம் நாள் நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய கொறடாவாக மயிலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. சி.சிவக்குமார் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதை கடந்த ஜூலை 3-ஆம் நாள் கடிதம் வாயிலாக தங்களுக்குத் தெரிவித்த நான், அதை பேரவையின் ஆவணங்களில் பதிவு செய்து, உரிய ஆணைகளை பிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்.
ஆனால், இதுவரை அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திரு. இரா. அருள் அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் என்ற பெயரில் பொதுவெளியில் செயல்படுவதால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுகின்றன. எனவே, இனியும் தாமதிக்காமல் பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து திரு. இரா. அருள் நீக்கப்பட்டதை பேரவை ஆவணங்களில் பதிவு செய்து அறிவிக்கக் கோருகிறேன் என அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.