கடந்த ஆண்டு டிசம்பரில் விழுப்புரத்தில் நடைபெற்ற பாமக சிறப்புக் பொதுக்குழுக் கூட்டத்தில், நிறுவனர் ராமதாஸ் தனது மூத்த மகள் காந்திமதியின் மகன் முகுந்தனை பாமக இளைஞர் பிரிவுத் தலைவராக அறிவித்தார். இந்தக் கூட்டத்தில், இந்த முடிவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்ததால், ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த மே மாதம் நடந்த வன்னியர் சங்க மாநாட்டில் பேசிய ராமதாஸ், "பாமக தலைவராக நானே இருப்பேன், தேர்தல் தொடர்பான முடிவுகளை நானே எடுப்பேன்" என்று வெளிப்படையாக அறிவித்தார். மேலும், பாமக தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ் இனி செயல்தலைவராகச் செயல்படுவார் என்றும் அறிவித்தார்.
இந்த அறிவிப்புகளுக்குப் பிறகு, ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் தரப்பில் கட்சியின் பழைய நிர்வாகிகளை நீக்கியும், புதிய நிர்வாகிகளை நியமித்தும் தொடர் அறிவிப்புகள் வெளியாகி, கட்சிக்குள் குழப்பம் நீடித்தது.