பாம்பன் பாலம் திறப்பு விழா; ராம நவமியில் தேதி குறித்த பிரதமர் மோடி!!
ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்புக்கு தயாராக உள்ளது. பிரதமர் மோடி ஏப்ரல் 6-ம் தேதி திறந்து வைத்து ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்யவுள்ளார்.
ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்புக்கு தயாராக உள்ளது. பிரதமர் மோடி ஏப்ரல் 6-ம் தேதி திறந்து வைத்து ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்யவுள்ளார்.
Pamban bridge opening Date : ராமேஸ்வரம் ஆன்மிக சுற்றுலா தலங்களில் முதன்மையாக உள்ளது. அந்த வகையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரம் வந்து ராமநாதசுவாமி கோயிலை தரிசனம் செய்து விட்டு, ராமர்பாதம், தனுஷ்கோடி போன்ற இடங்களை பார்வையிட்டு செல்வார்கள். அந்த வகையில் தனித்தீவாக உள்ள ராமேஸ்வரத்தை இணைக்க மண்டபத்தில் இருந்து பாம்பனுக்கு கடலில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு 1914ம் ஆண்டு பிரிட்டிஷ் காலத்தில் ரயில் பாலம் அமைக்கப்பட்டது.
100 ஆண்டுகள் பழமையான பாம்பன் பாலம்
இந்த ரயில் மூலம் நாள்தோறும் 20க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 100ஆண்டுகளை கடந்த பாலம் அவ்வப்போது பழுதடைந்தது. இதனால் ரயிலை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பழைய பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.
இதன் காரணமாக ராமேஸ்வரத்திற்கு ரயில் இயக்கப்படாமல் மண்டபம் வரை மட்டுமே ரயில் சேவை நடைபெற்றது. இதனால் ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் மண்டபத்தில் இறங்கி பேருந்து மூலம் தங்களது உடமைகளோடு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் ரயில் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
புதிய பாம்பன் பாலம்
இதனையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு புதிய பாலம் கட்டுமானப்பணிகள் தொடங்கியது. இடையில் கொரோனா பாதிப்பு காரணமாக பணிகள் பாதிக்கப்பட்ட நிலையில் சுமார் 5 ஆண்டு காலத்தில் கட்டுமானப்பணிகள் முழுவதுமாக முடிவடைந்துள்ளது. பழைய பாம்பன் பாலத்தில் கப்பல்கள் செல்வதற்காக மனிதர்கள் மூலம் பாலம் தூக்கப்பட்ட நிலையில், புதிய பாலத்தில் மேம்பட்ட மின்-இயந்திர லிஃப்ட் பொறிமுறையால் பாலம் தூக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாம்பன் பாலத்தை திறந்து வைக்கும் மோடி
இந்தப் புதிய பாலத்தில் 72.5 மீட்டர் நீளமுள்ள மையப் பகுதி உள்ளது. இதன் மூலம் கப்பல்கள் செல்வதற்காக 17 மீட்டர் உயரத்திற்கு பாலத்தை உயர்த்த முடியும். இந்த நிலையில் பாம்பனில் கடல் நடுவே ரூ.550 கோடி செலவில் புதியதாக கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலம் திறப்பு விழாவிற்கு தயாரானது.
ஆனால் ராமேஸ்ரத்தில் ரயில் நிலையத்தில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்படாத காரணத்தால் திறக்கப்படாமல் இருந்தது. பல முறை பிரதமர் திறந்து வைக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது ஏப்ரல் 6ஆம் தேதி பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராமேஸ்வரம் கோயிலில் மோடி
அதன் படி வருகிற ஏப்ரல் 5ஆம் தேதி இலங்கை செல்லும் பிரதமர் மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளார். அப்போது தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது. இதனையடுத்து இலங்கையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் வந்து பிரதமர் மோடி தரையிறங்குவார் என கூறப்படுகிறது.
அங்கிருந்து நேரடியாக பாம்பன் வருகை தர உள்ளதாகவும் பாம்பன் புதிய பாலம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிறகு ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவிலில் மோடி தரிசனம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.