பில் கேட்ஸுக்கு தூத்துக்குடி முத்துக்களை பரிசளித்தேன்! மோடி சொல்லிய சீக்ரெட்!

Published : Jul 26, 2025, 09:13 PM IST

பிரதமர் மோடி தூத்துக்குடி விமான நிலையத் திறப்பு விழாவில் பில் கேட்ஸுக்கு தூத்துக்குடி முத்துக்களைப் பரிசளித்ததை நினைவுகூர்ந்தார். தமிழகத்தின் வளர்ச்சிப் பாதை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் குறித்தும் அவர் பேசினார்.

PREV
14
தூத்துக்குடியில் பிரதமர் மோடி உரை

பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) தூத்துக்குடியில் விரிவுபடுத்தப்பட்ட விமான நிலையத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர், கடந்த ஆண்டு மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸைச் சந்தித்தபோது, தூத்துக்குடி முத்துக்களைப் பரிசாக வழங்கியதை நினைவுகூர்ந்தார்.

24
ராமர் மண்ணில் கால் பதித்தது மகிழ்ச்சி

தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு "ராமர் மண்ணில்" கால் பதித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்த பிரதமர், தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும் பயணம் 2014 ஆம் ஆண்டு தன்னுடைய ஆட்சியின் தொடக்கத்தில் இருந்தே ஆரம்பித்துவிட்டதாகக் கூறினார். திருச்செந்தூர் முருகனின் ஆசியோடு தூத்துக்குடியில் வளர்ச்சிப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று தூத்துக்குடியில் விமான நிலைய விரிவாக்கம், துறைமுகத் திட்டங்கள் மற்றும் எரிசக்தித் துறையின் முக்கிய திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். கடந்த 11 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தித் துறைகளில் தமிழ்நாட்டில் பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

34
பில் கேட்ஸுக்கு பரிசளித்த தூத்துக்குடி முத்து

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்களிப்பை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார். ஆழ்கடல் பகுதியில் கப்பல்களைச் செலுத்தி ஆங்கிலேயர்களுக்குச் சவால் விட்ட வ.உ.சிதம்பரனார், சுதந்திரமான பாரதத்தை உருவாக்கப் பாடுபட்ட வீரபாண்டிய கட்டபொம்மன், அழகுமுத்துக்கோன் போன்ற தலைவர்களைப் போற்றினார். மேலும், மகாகவி பாரதிக்கும் தூத்துக்குடிக்கு உள்ள உறவு, தனது சொந்தத் தொகுதியான காசிக்கும் உள்ளதாகக் கூறி பெருமிதம் கொண்டார்.

"கடந்த ஆண்டு பில் கேட்ஸுக்கு தூத்துக்குடியின் சுத்தமான முத்துக்களைப் பரிசாக வழங்கியது இன்றும் என் நினைவில் உள்ளது. பாண்டிய நாட்டின் சுத்தமான முத்துக்கள் உலகப் பொருளாதாரத்தின் அடையாளமாக இருந்தன. இங்கிலாந்து உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் பொருளாதாரத்திற்குப் புதிய உத்வேகம் அளிக்கும்" என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

44
நவீன இந்தியாவின் அடையாளம்

"ஆபரேஷன் சிந்தூரின் போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் பலத்தை நீங்கள் கண்கூடாகப் பார்த்திருப்பீர்கள்" என்று பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் வலிமையை அவர் வலியுறுத்தினார். தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு முழுமையாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

தூத்துக்குடி விமான நிலையம் மேம்படுத்தப்பட்டு உள்ளதால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று கூறிய பிரதமர், "ரூ.2500 கோடி மதிப்பிலான சாலை வசதித் திட்டங்களைத் தமிழகத்திற்குக் கொடுத்துள்ளோம். புதிய சாலைகள் மூலம் தூத்துக்குடி துறைமுகம் மேம்படும்" என்றார். தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தகவல் தெரிவித்தார்.

"தேசத்தின் முதல் தனித்தன்மை வாய்ந்த செங்குத்து தூக்குப் பாலம் தமிழ்நாட்டில் தான் உள்ளது. தேசத்தின் நீண்ட கடல் பாலம் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது. இந்திய நாட்டை நவீனப்படுத்தும் மாபெரும் வேள்வி நடைபெற்று வருகிறது" என்று தனது உரையை நிறைவு செய்தார் பிரதமர் மோடி.

Read more Photos on
click me!

Recommended Stories