Published : Jul 31, 2025, 02:07 PM ISTUpdated : Jul 31, 2025, 02:33 PM IST
அதிமுக- பாஜக கூட்டணி தற்போது உருவாகியுள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தை பாஜக கண்டுகொள்ளாத நிலையில், அந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டி காரணமாக பல பிரிவுகளாக அதிமுக பிரிந்துள்ளது. அதிமுகவின் மூத்த தலைவராக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம், 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி - ஓபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் காரணமாக அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார்.
இதனையடுத்து பல கட்ட சட்ட போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஓ,பன்னீர் செல்வத்திற்கு சாதகமான நிலை ஏற்படவில்லை. இதன் காரணமாக பாஜகவை நம்பி அந்த கட்சியுடன் கூட்டணி மேற்கொண்டார்.
23
ஓபிஎஸ்யை கை விட்ட பாஜக
அந்த வகையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை அதிமுக கைவிட்ட நிலையில் ஓ.பன்னீர் செல்வம் கூட்டணி அமைத்து ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார் இந்த தேர்தலில் அதிமுகவை விட அதிக வாக்குகள் பெற்று தனது செல்வாக்கை ஓ.பன்னீர் செல்வம் நிரூபித்தார். இதனையடுத்து அதிமுகவுடன் தன்னை இணைக்க பாஜக உதவும் என காத்திருந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
தற்போது சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக- பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், பாஜக ஓ.பன்னீர் செல்வத்தை கை விட்டுள்ளது. தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க ஓ.பன்னீர் செல்வம் வாய்ப்பு கேட்டிருந்த நிலையில் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
33
பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ்
சென்னையில் ஓபிஎஸ் தலைமையிலான தொண்டர் உரிமை மீட்பு குழுவின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த அணியின் மூத்த தலைவர் பன்ரூட்டி ராமசந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்றைய கூட்டத்தில் தமிழக அரசியல் குறித்தும், எதிர்காலம் குறித்தும் , மக்கள் பிரச்சனைகள் குறித்து நீண்ட நேரம் ஆலோசிக்கப்பட்டது. அந்த வகையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியில் எங்கள் அணி இடம்பிடித்திருந்தோம். தற்போது தேசிய ஜனநாயக உரிமை மீட்பு குழு உறவை முறித்துக்கொண்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இனி இடம்பெற மாட்டோம். மேலும் எந்த கட்சியுடனும் தற்போதைய நிலையில் கூட்டணி இல்லை, எதிர்காலத்தில் அரசியல் நிலவரம் தொடர்பாக முடிவை பொறுத்து கூட்டணி தொடர்பாக முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். பாஜகவுடன் கூட்டணி முறித்தது ஏன் என்ற கேள்விக்கு தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும் என கூறினார்.
அடுத்தாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் சுற்றுப்பயணம் செய்யுள்ளதாகவும் பன்ருட்டி ராமசந்திரன் தெரிவித்தார்.