
அதிமுகவில் அதிகார மோதல்
தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாகவும் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியை பிடித்த கட்சியாக திகழ்ந்தது அதிமுக, கடந்த 2017ஆம் ஆண்டு அக்கட்சியின் தலைவராக இருந்த ஜெயலலிதா மறைவையடுத்து அந்த தலைமை இடத்தை பிடிக்க நடைபெற்ற போட்டியில் பல பிளவுகளாக பிரிந்து கிடக்கிறது. ஆரம்பத்தில் தமிழக முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் பொறுப்பேற்ற நிலையில், அதனை பிடிக்க சசிகலா திட்டம்போட்டார்.
இதனால் அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர் செல்வம் திடீரென ஜெயலலிதா சமாதி முன்பு அமர்ந்து தர்ம யுத்தம் மேற்கொண்டார். தமிழக அரசியலே பரபரப்பான நிலையில், ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது தமிழக முதலமைச்சராக சசிகலா பதவியேற்க திட்டமிட்டார். ஆனால் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு காரணமாக சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் பதவியை கொடுத்து சென்றார் சசிகலா,
சசிகலாவிற்கு அதிர்ச்சி கொடுத்த எடப்பாடி
இதனையடுத்து ஓ.பன்னீர் செல்வம்- எடப்பாடி பழனிசாமி என இரண்டு அணிகள் செயல்பட்டு வந்த நிலையில், ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைந்து ஆட்சியை வழிநடத்தினர். இதற்கிடையே சசிகலா மற்றும் டிடிவி தினகரனை கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டனர். கட்சி உணக்கு ஆட்சி எனக்கு என சென்ற எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் இடையே மறைமுகமாக மோதல் ஏற்பட்டது.
இதனால் கட்சியினர் மத்தியிலும் அதிருப்தி உருவானது. இதன் வெளிப்பாடாக 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியது. இந்த தோல்விக்கு இரட்டை தலைமை தான் காரணம் என கூறி கட்சியை எடப்பாடி பழனிசாமி முழுவதுமாக தன் வசமாக்கிக்கொண்டார். இதனையடுத்து மீண்டும் தர்மயுத்தம் 2.0 தொடங்கினார் ஓ.பன்னீர் செல்வம்.
அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை
இந்த மோதல் காரணமாக நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல இடைத்தேர்தலிலும் மோசமான பின்னடைவை அதிமுக சந்தித்தது. எனவே அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என தொண்டர்கள் மத்தியில் குரல் எழுந்தது. இதற்காக பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ விடாப்பிடியாக ஓபிஎஸ் மற்றும் சசிகலாவை கட்சியில் சேர்க்க வாய்ப்பில்லையென கூறினார்.
இந்த நிலையில் நேற்று அதிமுக தலைமை அலுவகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. அதனை முறியடிக்க கூடிய வலிமை உங்களிடம் இருக்கும் என எதிர்பார்க்கிறேன். 15 மாத காலம் தான் தேர்தலுக்கு உள்ளது. நீங்கள் எந்தளவிற்கு பணி செய்கிறீர்களோ அந்தளவிற்கு வலிமை கிடைக்கும் என கூறினார்.
எடப்பாடி மீது செல்போன் வீச்சு
இளைஞர்கள் கையில் 40 சதவிகித வாக்கு உள்ளது, இளைஞர்கள் என்ன விரும்புகின்றனர் என்பதை புரிந்து அதற்கு ஏற்றவாறு சமூக வலைதளத்தில் பதிவு செய்யுங்கள். தற்போதுள்ள நிலையில், 10% வாக்குகளை நாம் இழந்து உள்ளோம் அதனை மீட்கும் வகையில் நீங்கள் செயல்பட வேண்டும், இளைஞர்கள் வாக்குகளை நாம் பெற வேண்டும். இளைஞர்கள் வாக்கை பெற நாம் உழைக்க வேண்டும் என ஆலோசனை கூறியிருந்தார்.
முன்னதாக அதிமுக அலுவலகத்தில்தகவல் தொழில் நுட்ப அணி சார்பாக அமைக்கப்பட்டிருந்த LED திரையை எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். அப்போது - தொண்டர்கள் கோஷம் எழுப்பிய பொழுது எடப்பாடி பழனிச்சாமி மீது ஒரு செல்போன் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. யாரோ வேண்டும் என்றே மொபைல் போனை எரிந்ததாக தகவல் பரவியது.
எடப்பாடிக்கு ஆதரவாக ஓபிஆர்
இந்த சூழ்நிலையில் இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும், முன்னாள் எம்பியுமான .ஓ.பி.ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணன் திரு.எடப்பாடி பழனிச்சாமி மீது தொலைபேசி எறிந்த செயல்களை வன்மையாக கண்டிக்கிறேன். இது முற்றிலும் அநாகரிகமான செயலாகும். அரசியல் மற்றும் கருத்து வேறுபாடுகளுக்குப் பின்னால் இருந்து வந்தாலும், நம்முடைய மரியாதையும் சீர்திருத்தமும் குறைவாகக் கூடாது. வன்முறையைத் தூண்டக்கூடாது.
இச்சம்பவத்தில் ஈடுபட்டவர் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்வதாக கூறினார். மேலும் இது போன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்கவும், தலைவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல்துறையினர்மற்றும் பாதுகாவல் பணியாளர்கள் மிகுந்த கவனத்துடனும், கூடுதல் விழிப்புடன் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார்.