பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கூட்டணிக்குள் வரவழைக்கும் முயற்சியாக பாஜக அமைப்புச் செயலாளர் பிஎல் சந்தோஷை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக.வில் இருந்து விலக்கப்பட்டதில் இருந்து தனது இருப்பைக் காட்டிக்கொள்ள பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக அதிமுக தொண்டர் உரிமை மீட்பு குழு என்ற குழுவை ஏற்படுத்தி பாஜக கூட்டணியில் பயணித்து வந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும் இடம் பெறுவற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தான். எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து ஓபிஎஸ், டிடிவி.யை தங்கள் கூட்டணியில் நிலை நிறுத்திக் கொண்டார்.
24
விரக்தியில் பன்னீர்செல்வம்
ஆனால் தற்போது மாநிலத் தலைவர் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மவுசு குறைந்து போல் தெரிகிறது. அதன் பிரதிபலிப்பாகவே, அண்மையில் தமிழகத்திற்கு வந்த அமித் ஷா, நரேந்திர மோடி உள்ளிட்டோரை சந்திப்பதற்கு பன்னீர்செல்வம் அனுமதி கோரியும் அது மறுக்கப்படவே பன்னீர் செல்வம் விரக்தி அடைந்தார். ஒரு கட்டத்தில் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற ஓபிஎஸ் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக வெளிப்படையாக அறிவித்தார்.
34
முட்டுக்கட்டை போட்ட நயினார்
ஆனால், பன்னீர்செல்வம் என்னிடம் தெரிவித்திருந்தால் பிரதமர் மோடியை சந்திப்பதற்கு நானே ஏற்பாடு செய்திருப்பேனே என்று கூறி தற்போதைய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளிப்படையாக தெரிவித்தார். ஆனால் நயினாரின் பேச்சை மறுத்த ஓபிஎஸ் நான் பிரதமரை சந்திப்பதற்கு முட்டுக்கட்டையாக இருந்ததே நயினார் தான் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் இடையே ஆலோசனை மேற்கொள்வதற்காக பாஜக அமைப்புச் செயலாளர் பிஎல் சந்தோஷ் நாளை சென்னை வரவுள்ளார். முன்னதாக அவருடன் ஆலோசனை மேற்கொள்வதற்காக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார். அங்கு கட்சியின் செயல்பாடு, யார் யாருக்கு சீட்டு வழங்குவது, எந்தெந்த தொகுதிகளை கூட்டணி கட்சிகளிடம் கேட்டுப் பெறுவது உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி பேசப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் மேலாக ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வருவது தொடர்பாகவும் அண்ணாலை அமைப்புச் செயலாளரிடம் வலியுறுத்தியதாக செய்தி வெளியாகி உள்ளது.
அண்ணாமலையின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அமைப்புச் செயலாளர் பிஎல் சந்தோஷ் பன்னீர்செல்வத்தை சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் பன்னீர்செல்வத்தை தொடர்பு கொண்ட பாஜக.வின் முக்கிய நிர்வாகி நடந்த விவகாரங்களை எடுத்துக் கூறி பிஎல் சந்தோஷை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் கூட்டணி முறிந்துவிட்டதாக வெளிப்படையாக அறிவித்த பின்னர் எப்படி சந்திக்க முடியும் என்று சந்தேகம் எழுப்பியதோடு, மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் முடிவை தெரிவிப்பதாகக் கூறி பன்னீர்செல்வம் அழைப்பை நிறுத்திக் கொண்டதாக சொல்லப்படுகிறது.