Slowest Train in India
நீலகிரிக்கு சுற்றுலா செல்லும் பலரது மனதிலும் நீங்கா இடம்பிடிப்பது மலை ரயில் தான். பலரையும் வசியப்படுத்தும் இந்த ரயில் நீலகிரியின் அழகை அனுபவிக்க விரும்புபவர்களின் கனவு வாகனமாக உள்ளது. ஆசியாவிலேயே பல் சக்கரங்களில் இயங்கும் ஒரே ரயில் நீலகிரி மலை ரயில் மட்டுமே. 16 குகைகள், 250 பாலங்கள் என வளைந்தும் நெளிந்தும் பயணிக்கும் இந்த மலை ரயிலின் அழகே தனி தான்.
Ooty Train
1833-ம் ஆண்டுகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மாட்டுவண்டி மூலமே மக்கள் பயணித்தனர். பின்னர் 1872-ல் அந்த பயணம் குதிரை வண்டி மூலம் தொடர்ந்தது. அப்போது மதராசப்பட்டினத்தை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களுக்கு நீலகிரியின் இயற்கை அழகும், சிலிர்க்கும் குளிரும் மிகவும் பிடித்துப்போனதாம். இதனால் நீலகிரியை கோடை வாசஸ்தலமாக கொண்டாடத் தொடங்கினர்.
Nilgiri Train
ஆங்கிலேயர் காலத்தில் நீராவி இஞ்சினை கொண்டு இயக்கப்பட்ட இந்த ரயில், பிற்காலத்தில் காலத்தின் தேவைக்கேற்ப பல்வேறு வசதிகளுடன் மாற்றங்கள் செய்யப்பட்டது. ஆனாலும் இந்த மலை ரயில் தனது மகிமையை எப்போதும் இழக்கவே இல்லை. செங்குத்தான மலைகளில் பயணம் செய்து, உலகின் எந்த பகுதிகளில் இருந்தும் வரும் அனைத்து சுற்றுலா பயணிகளையும் மகிழ்வித்து வரும் இந்த மலை ரயில், 125 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகிறது.
ooty mountain train
இந்தியாவிலேயே மிகவும் மெதுவாக செல்லக்கூடிய ரயிலும் இந்த நீலகிரி மலை ரயில் தான். இந்த மலை ரயில் வெறும் 9 கிலோ மீட்டர் வேகத்தில் தான் இயக்கப்படுகிறது. இதனால் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை உள்ள 46 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 5 மணிநேரம் ஆகிறது. அதேபோல் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வெறும் 3 மணிநேரம் 30 நிமிடத்தில் வந்துவிடுகிறது.
uyire movie song shoot in ooty train
நீலகிரி மவுண்டெயின் எக்ஸ்பிரஸ் என அழைக்கப்படும் இந்த ரயில், மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லார், குன்னூர், வெலிங்டன், வல்டேன் வழியாக ஊட்டியை வந்தடைகிறது. இந்த மலை ரயில் பாதை யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த மலை ரயிலில் தான் உயிரே படத்தில் இடம்பெறும் தையா தையா பாடலை படமாக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... மகாளய அமாவாசை, பிரம்மோத்ஸவம் சிறப்பு பேருந்துகள்! எங்கிருந்து இயக்கம்! இதோ முழு தகவல்