Nellai DMK நெல்லையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை தோற்கடிக்க, பிரபலமான அரசு ஒப்பந்தக்காரரும், எடப்பாடியின் பினாமி என அறியப்பட்டவருமான ஒருவரை திமுக களமிறக்க திட்டமிட்டுள்ளது.
நெல்லையில் சூடுபிடிக்கும் அரசியல் களம்: தலைமை எடுத்த அதிரடி முடிவு
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், தி.மு.க.வின் தேர்தல் பணிகள் மிக வேகமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. வழக்கம்போல பொது மக்களை முதலில் சந்திக்காமல், கட்சி நிர்வாகிகளை நேரடியாகச் சந்தித்து வருகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். 'உடன்பிறப்பே வா' என்ற தலைப்பில் அவர் தொகுதி வாரியாக தி.மு.க. நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையின் முக்கிய நோக்கம், தி.மு.க.வுக்கு சவாலான தொகுதிகளைக் கண்டறிந்து, அங்கு வெற்றி வியூகங்களை அமைப்பதுதான்.
25
'தோற்றால் பதவி பறிப்பு': நெல்லை நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் கொடுத்த வார்னிங்
அந்த வகையில், கடந்த வாரம் அண்ணா அறிவாலயத்தில் நெல்லை மற்றும் சங்கரன்கோவில் தொகுதி நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது நெல்லை சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளுக்கு அவர் கடுமையான எச்சரிக்கை விடுத்ததாகத் தெரிகிறது. "நெல்லையில் இந்த முறை தோற்றால், அத்தனை பேரின் பதவியும் பறிக்கப்படும்" என்று ஸ்டாலின் நேரடியாகவே நிர்வாகிகளிடம் கூறியிருக்கிறார். நெல்லை தொகுதியைப் பொறுத்தவரை, தற்போதைய எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.
35
'துட்டு உள்ள நபர்': பாஜக தலைவரை வீழ்த்த திமுகவின் புது வியூகம்
முதலமைச்சரின் இந்த அதிரடி எச்சரிக்கைக்குப் பின்னணியில், நெல்லை தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக ஒரு பிரபல தொழிலதிபரையும், அரசு ஒப்பந்தக்காரரையும் தி.மு.க. களமிறக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பினாமி என்றும் அறியப்பட்டவர். நயினார் நாகேந்திரனை வீழ்த்த வேண்டுமானால், அதிகாரப்பூர்வ பணபலம் கொண்ட ஒருவரால்தான் முடியும் என்ற முடிவுக்கு தி.மு.க. தலைமை வந்திருப்பதாகத் தெரிகிறது.
எடப்பாடியின் பினாமி: யார் இந்த பிரபல அரசு ஒப்பந்தக்காரர்?
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த திருசெந்தூர் ஆண்டவரின் பெயர் கொண்ட இவர், தமிழக நெடுஞ்சாலைத் துறையின் பிரபல ஒப்பந்தக்காரர். இவரது நிறுவனம் பல கோடி ரூபாய் மதிப்பிலான சாலைப் பணிகளைத் தமிழகத்தின் பல மாவட்டங்களில் செய்து வருகிறது. அரசியல் ரீதியாக அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. என எந்த ஆட்சி அமைந்தாலும், இரண்டு ஆட்சிகளிலும் செல்வாக்குடன் அரசு ஒப்பந்தங்களைப் பெறுவதில் இவர் வல்லவராக இருந்து வருகிறார். இவர் தற்போது தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டிருப்பதாக நெல்லை தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
55
அமைச்சர் ஆதரவுடன் சீட் உறுதி: நெல்லை திமுக வட்டாரத் தகவல்
நெல்லை தி.மு.க. வட்டாரத்தில் இதுகுறித்து விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் மேலும் அதிர்ச்சியளிக்கின்றன. "மாற்றுக்கட்சியில் இருந்து சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்த ஆலங்குளத்தின் முக்கிய புள்ளி ஒருவரின் மூலமாக, கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தப் பிரபல அரசு ஒப்பந்தக்காரர் தி.மு.க.வில் சேர்க்கப்பட்டுள்ளார். கட்சிக்குள் நுழையும்போதே, நெல்லை தொகுதியின் வேட்பாளர் இவர்தான் என்ற உறுதிமொழியுடன் தான் இவர் அழைக்கப்பட்டு இருக்கிறார். மேலும், இவருக்கு ஓர் முக்கிய அமைச்சரின் ஆதரவும் முழுமையாகக் கிடைத்திருக்கிறது. நயினார் நாகேந்திரனைத் தோற்கடிக்க வேண்டுமென்றால், நல்ல துட்டு உள்ள நபரால் தான் முடியும். அதனால்தான், இந்தப் பெரிய பணபலம் கொண்டவர் களமிறக்கப்பட்டுள்ளார்" என்று தி.மு.க. வட்டாரங்கள் கூறுகின்றன. நெல்லை களம் நிச்சயம் இந்த முறை மிக கடுமையான பணப் போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.