தமிழ்நாட்டில் அதிமுக வட்டச் செயலாளராக செயல்பட்ட தாமோதரன் சீனிவாசன், தற்போது இங்கிலாந்தில் அரசியல் வரலாறு படைக்கும் ஒருவராக உருவெடுத்து வருகிறார். லண்டனின் கிரேடன் நகராட்சியில் கவுன்சிலராக தேர்வு பெற்ற அவர், துணை மேயர் பதவியையும் வகித்துள்ளார். அடுத்த ஆண்டு அந்த நகரத்தின் மேயர் அல்லது பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினராக உயர வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
குடும்பத்தின் அரசியல் பின்னணி
1980களில் சென்னை வில்லிவாக்கத்தில் 128வது வட்ட அதிமுக செயலாளராக இருந்தார் தாமோதரன், தனது குடும்பத்தின் எம்ஜிஆர்–ஜெயலலிதா அரசியல் நெருக்கத்தால் கட்சிப் பணிகளில் தீவிரமாக இருந்தார். பின்னர் அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றங்களால், தாயின் ஆலோசனையின்படி லண்டனில் மேல்படிப்புக்காக செல்ல அவர் முடிவு செய்தார். அங்கிருந்த படிப்பு அவருடைய வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
தொழிலாளர் கட்சியில் இணைப்பு
லண்டனில் படிப்பை முடித்த பிறகு அவர் ஒரு தொழிற்சாலையில் நல்ல வேலை பெற்றார். ஆனால் வேலை மட்டும் பார்க்காமல், அங்கு வாழும் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முனைந்ததால் சமூகத்தில் நம்பிக்கையைப் பெற்றார். தமிழர்களுக்காக செய்த சேவையால், அப்போதைய பிரிட்டன் அமைச்சர் ஸ்டீவ் ரீட் அவரை தொழிலாளர் கட்சியில் சேர ஊக்குவித்தார். பிரிட்டனில் குடியேறிய மக்களுக்கு அதிக அக்கறை காட்டும் கட்சியாக இருப்பதால், தாமோதரன் அதை ஏற்றுக்கொண்டார். கட்சிப்பணிகளில் செயல்பட்ட அவர், விரைவில் கவுன்சிலர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார்.