வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் திமுக, தவெக இடையே தான் போட்டி என விஜய் கூறியது விந்தையிலும் விந்தை என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு பின்னர் தமிழக வெற்றி கழகத்தின் முதலாவது சிறப்பு பொதுக்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் திமுக, தவெக இடையே தான் போட்டி என்று உரத்த குரலில் பேசினார். இதனைத் தொடர்ந்து அதிமுக, பாஜக கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் இது தொடர்பாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
23
விஜய்க்கு ஆதரவு..?
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சட்டமன்றத்தில் பாஜக, அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது கருத்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பகல் 12 மணிக்கு வருவதாக சொல்லிய விஜய் மாலை 7 மணிக்கு தான் கூட்டம் நடைபெறும் இடத்திற்கே வந்ததாக சொன்னார். இந்த கருத்தை நானும் ஏற்றுக் கொண்டேன். அதே நோத்தில் சம்பவ இடத்தில் 5 டிஎஸ்பிகள் தலைமையில் சுமார் 500 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததாக சொன்னார்கள். இது முற்றிலும் தவறான தகவல். சம்பவ இடத்தில் ஒரு காவல் அதிகாரியைக் கூட பார்க்க முடியவில்லை. நான் விஜய்க்கு ஆதரவாகவும் பேசவில்லை, எதிராகவும் பேசவில்லை.
33
விஜய் பேசுவது விந்தையிலும் விந்தை..
உலகிலேயே மிகப்பெரிய கட்சியாக பாரதிய ஜனதா கட்சி இருக்கிறது. எங்களிடம் 300க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் 1200க்கும் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். ஆனால் தமிழக வெற்றி கழகத்தில் ஒரு கவுன்சிலர் கூட இல்லை. அப்படி இருக்கையில் சட்டமன்ற தேர்தலில் தவெக, திமுக இடையே தான் போட்டி என விஜய் கூறுவது விந்தையிலும், விந்தை.
தங்களிடம் இருக்கும் பணத்தை வைத்து மட்டுமே ஆட்சியைப் பிடித்துவிடலாம் என ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் நினைக்கிறார்கள். இது ஒருபோதும் நடைபெறாது என்று தெரிவித்தார்.