அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைய முடிவு செய்துள்ளார். இந்நிலையில், அவரை கட்சியில் இருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமியை நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில், அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே. ஏ. செங்கோட்டையன், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணையவுள்ளது உறுதியாகியுள்ளது. இந்த அதிரடி முடிவை ஒட்டி, இன்று (நவம்பர் 26) அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
கோபிசெட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த கே. ஏ. செங்கோட்டையன், இன்று தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் எம். அப்பாவுவைச் சந்தித்து, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை முறைப்படி வழங்கினார். இதன் மூலம் அவர் த.வெ.க.வில் இணைவதற்கான முதல் படியை எடுத்து வைத்துள்ளார்.
24
பட்டினப்பாக்கத்தில் விஜய் உடன் சந்திப்பு
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இன்று மாலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டிற்குச் செங்கோட்டையன் சென்றார்.
அங்கு அவர் விஜய்யுடன் சுமார் 2 மணி நேரம் நீடித்த ஆலோசனையில் ஈடுபட்டார். இந்தச் சந்திப்பின்போது, த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்டோரும் உடன் இருந்துள்ளனர்.
இந்தச் சந்திப்பு, செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
34
முக்கியப் பதவிக்கு சம்மதம்
த.வெ.க.வில் இணைவது குறித்து விஜய்யுடன் பேசியபோது, செங்கோட்டையன் தனக்குப் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு நிகரான அதிகாரம் கொண்ட பதவி வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக, அவருக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்க விஜய் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
நாளை (நவம்பர் 27) நடிகர் விஜய் முன்னிலையில், செங்கோட்டையனும் அவரது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களும் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செங்கோட்டையன் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கைகள் குறித்து மூத்த அரசியல் விமர்சகரும் அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத் தனது கடுமையான கருத்தை எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் தனது பதிவில், "கோட்டைக்குப் போக வேண்டும் என்று திட்டமிட்டு மூத்தவர்களையும் காத்தவர்களையும் கட்சியைவிட்டு வெளியேற்றிய எடப்பாடிக்கு, போகிற போக்கை பார்த்தால் கோவணம் கூட மிஞ்சாது போல் தெரிகிறது." என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாகச் சாடியுள்ளார்.