தமிழக அரசு 'நலம் காக்கும் ஸ்டாலின்' என்ற புதிய மருத்துவ முகாமினை அறிமுகப்படுத்துகிறது. இந்த முகாம்கள் 38 மாவட்டங்களில் 1256 இடங்களில் அமைக்கப்பட்டு, வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கும்.
தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பொதுமக்கள், அரசு அலுவலகங்களுக்கு பல முறை பல சேவைகளுக்காக அழைய வேண்டிய நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் 46 சேவைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக ரேஷன் கார்டு, மகளிர் உரிமை தொகை என பல திட்டங்களுக்கு உடனடியாக தீர்வு கிடைப்பதால் மக்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் குவிந்து வருகிறார்கள். இதே போல மக்களின் உடல் நலனை காக்கும் வகையில் தமிழக அரசு புதுமையான திட்டத்தை இன்று அறிமுகம் செய்யவுள்ளது. ஆகஸ்ட் 2-ஆம் தேதி இன்று “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் தொடங்கவுள்ளது.
25
நலம் காக்கும் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைக்க உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் இந்தச் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளது. இம்முகாம்கள் சிறப்பு மருத்துவ வசதிகள் குறைந்த ஊரக பகுதிகள், குடிசைப் பகுதிகள், பழங்குடியினர் அதிகம்வசிக்கும் பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு நடத்தப்பட உள்ளன.
40 வயதிற்கு மேற்பட்டோர், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனநல பாதிப்புடையோர், இதய நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், பழங்குடியினர் மற்றும் சமூக-பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கு இம்முகாம்களில் முன்னுரிமை வழங்கப்பட உள்ளன.
35
நலம் காக்கும் ஸ்டாலின் - முகாம்கள் எங்கே நடைபெறுகிறது.?
ஒரு வட்டாரத்திற்கு 3 முகாம்கள் வீதம் 388 வட்டாரங்களில் 1164 முகாம்களும், ஒரு மண்டலத்திற்கு ஒருமுகாம் வீதம் பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 4 முகாம்கள் வீதம் 10 இலட்சம் மக்கள் தொகைக்கு அதிகமாக உள்ள 5 மாநகராட்சிகளில் 20 முகாம்களும்,
ஒரு மாநகராட்சிக்கு 3 முகாம்கள் வீதம் மக்கள் தொகை 10 இலட்சத்திற்குக் குறைவாக உள்ள 19 மாநகராட்சிகளில் 57 முகாம்களும் என மொத்தம் 1,256 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இம்முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இம்முகாம்களில் இரத்த அழுத்த பரிசோதனை மற்றும் அனைத்துப் பயனாளிகளுக்கும் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, முழுமையான இரத்த அணுக்களின் எண்ணிக்கை, இரத்த சர்க்கரை, சிறுநீரகச் செயல்பாட்டு பரிசோதனைகள் செய்யப்பட்டு, மருத்துவ முகாமிலேயே பயனாளிகளின் பரிசோதனை விவரங்கள் உடனடியாக குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்படும்.
இது மட்டுமில்லாமல் கண், காது, மூக்கு (ம) தொண்டை மற்றும் பல் மருத்துவச் சேவைகள் வழங்கப்படவுள்ளது. மேலும், பொது மருத்துவ நிபுணரின் அறிவுறுத்தலின்படி எக்ஸ்-ரே (X-Ray), எக்கோகார்டியோகிராம்(Echocardiogram), அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் (USG) மற்றும் பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் (ம) மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும் செய்யப்பட உள்ளன.
55
புற்றுநோய் கண்டறியும் சோதனை
இரத்த அழுத்தம், சிறுநீரக செயல்பாடு, பெண்களுக்கான கருப்பை வாய்ப்புற்று (ம) மார்பக புற்றுநோய் ஆகியவற்றை கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறுசிறப்பு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் மருத்துவச் சேவைகள் நவீன சுகாதார மேலாண்மைத் தகவல் முறைமை(HMIS 3.0) மூலம் கண்காணிக்கப்படும்.
தனியார் மருத்துவமனையில் 15ஆயிரம் மதிப்பிலான முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதுவே அரசு மருத்துவமனையில் 4ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. ஆனால் தமிழக அரசு சார்பாக நடைபெறவுள்ள இந்த முழு உடல் பரிசோதனை முகாமில ஒரு ரூபாய் செலவு இல்லாமல் பொதுமக்களுக்கு அளிக்கப்படவுள்ளது.