Published : Apr 25, 2025, 12:37 PM ISTUpdated : Apr 25, 2025, 12:51 PM IST
தமிழக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கடலூர் நீதிமன்றம் அளித்த விடுதலை தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
MRK Panneerselvam Release Cancelled: தற்போதைய தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடந்த 2006 - 2011 காலகட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.3 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்சஒழிப்புத் துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்படி எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அவரது மனைவி மற்றும் மகன் மீதான வழக்கை விசாரித்த கடலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம், இந்த வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உட்பட 3 பேரையும் விடுவித்து தீர்ப்பு வழங்கியது.
25
Asset accumulation case
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மீதான சொத்து குவிப்பு வழக்கு
இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக நடந்தது. அப்போது லஞ்சஒழிப்புத் துறை தரப்பில் இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகையை மேற்கோள்காட்டி குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாகவும், அதை கீழமை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளத் தவறிவிட்டதாகவும் வாதிட்டார்.
பின்னர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தரப்பில் குடும்ப சொத்துக்களையும், அறக்கட்டளை சொத்துக்களையும் வருமானத்துக்கு அதிகமான சொத்து என லஞ்ச ஒழிப்புத் துறை தவறுதலாக கணக்கிட்டுள்ளது. இந்த வழக்கில் கடலூர் நீதிமன்றம் சரியான உத்தரவைத்தான் பிறப்பித்துள்ளது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்க கடலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கை வேலூர் நீதிமன்றம் விடுத்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. அதேபோல் டாஸ்மாக் வழக்கு, அமைச்சர் பொன்முடி, செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளில் நீதிமன்றம் அதிரடி காட்டியுள்ளது. அரசியல் ரீதியாக திமுகவுக்கும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.