ராமதாஸ் பெறாத பிள்ளை திருமாவளவன், அவருக்கும் எங்களுக்கும் எந்தவித பிரச்சினையும் இல்லை என பாமக ராமதாஸ் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் அருள் தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை, மகன் இடையேயான மோதல் காரணமாக அக்கட்சி தற்போது இரண்டாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் எந்த கூட்டணியில் இணைவது என்ற குழப்பம் ராமதாஸ் தரப்புக்கு உருவாகியுள்ளது. மதன் அன்புமணி அதிமுக கூட்டணியில் இணைந்துவிட்ட காரணத்தால் திமுக கூட்டணி அல்லது தவெவுடன் இணைய வேண்டிய கட்டாயத்திற்கு ராமதாஸ் தரப்பு தள்ளப்பட்டுள்ளது.
24
கறார் காட்டும் திருமாவளவன்
திமுக கூட்டணியில் இணையவேண்டும் என்றால் அங்கு ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி இருப்பது ராமதாஸ்க்கு தலைவலியாக அமைந்துள்ளது. திமுக கூட்டணியில் விசிக முக்கிய கட்சியாக இருந்து வருகிறது. பாமகவின் ஏதேனும் ஒரு தரப்பு திமுக கூட்டணிக்குள் வரும் பட்சத்தில் நாங்கள் கூட்டணியை விட்டு உடனடியாக வெளியேறிவிடுவோம் என திருமாவளவன் ஏற்கனவே தெரிவித்துவிட்டார்.
34
ராமதாஸ் பெறாத பிள்ளை திருமாவளவன்
இந்த நிலையில் திருமாவை சமாதானப்படுத்தி திமுகவில் கூட்டணி சேரும் பணியை ராமதாஸ் தரப்பு கையில் எடுத்துள்ளது. இதனிடையே விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள், “விசிக தலைவர் திருமவளவனுக்கும், தங்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. ராமதாஸ் பெறாத பிள்ளை திருமாவளவன்.
வன்னியர்களையும், தலித் மக்களையும் இரண்டு தண்டவாளங்களாக பார்ப்பவர் தான் ராமதாஸ். அப்படி இருக்கையில் எங்களுக்கு யாருமே எதிரி கிடையாது. தமிழகத்தில் ஒரே நாளில் 7 அம்பேத்கர் சிலைகளை திறந்தவர் ராமதாஸ். ராமதாஸ் மீது எந்தவித வழக்கும் கிடையாது. யாருடைய மிரட்டலுக்கும் அச்சப்பட தேவையில்லை. தைலாபுரம் தோட்டத்தில் தான் எங்கள் கூட்டணி உறுதி செய்யப்படும்.
அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு உதாரணம் டிடிவி தினகரன் பாஜக கூட்டணியில் இணைந்தது” என்று தெரிவித்துள்ளார்.