மேட்டூர் அணை 68 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியது! விவசாயிகள் மகிழ்ச்சி!

Published : Jun 29, 2025, 07:57 PM IST

தொடர் மழையால் கர்நாடக அணைகள் நிரம்பி வழிவதால், மேட்டூர் அணை 68 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. காவிரி கரையோர 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

PREV
16
மேட்டூர் அணை

கேரளா மற்றும் கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் தென்மேற்கு பருவமழையால் கர்நாடக அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால், மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 68 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டுவது இது இரண்டாவது முறையாகும். பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால், காவிரி கரையோர 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

26
கர்நாடக அணைகள் நிரம்பின - மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு

இந்த ஆண்டு கேரளாவில் கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத வகையில் தென்மேற்கு பருவமழை முன்பே தொடங்கி தீவிரமடைந்துள்ளது. இதேபோல், கர்நாடகாவிலும் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் விளைவாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டின.

பாதுகாப்பு கருதி இந்த அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த உபரிநீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து சேருகிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 60 ஆயிரத்து 740 கனஅடி வீதம் நீர்வரத்து இருந்த நிலையில், நேற்று மாலையில் இது வினாடிக்கு 80 ஆயிரத்து 984 கனஅடியாக அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

36
மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு - டெல்டா பாசனத்திற்கு நீர் அதிகரிப்பு

120 அடி உயர மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று பகலில் 117 அடிக்கு மேல் உயர்ந்ததுடன், நேற்று இரவு 118 அடியை எட்டியது. அதே நேரத்தில் காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கனஅடியில் இருந்து வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்த நீர், அணையையொட்டி அமைந்துள்ள நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கனஅடி வீதமும், அணையின் மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி வீதமும் திறந்து விடப்பட்டது. அப்போது அணையின் நீர் இருப்பு 88.59 டி.எம்.சி.யாக (ஒரு டி.எம்.சி. என்பது நூறு கோடி கனஅடி) இருந்தது.

46
11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்ததால், சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அந்தந்த மாவட்டம் முழுவதும் காவிரி கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவிரி கரையோரம் வசித்து வரும் தாழ்வான பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் உடைமைகளுடன் மேடான பகுதிகளுக்குச் சென்று பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

56
மேட்டூர் அணையில் உபரிநீர் திறப்பு

இந்த நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 119.22 அடியை எட்டியது. அணையின் மொத்த கொள்ளளவான 93.4 டி.எம்.சி.யில் தற்போது நீர் இருப்பு 92.23 டி.எம்.சி.யாக உள்ளது. டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து 26 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த சூழலில், மேட்டூர் அணை தனது 120 அடி என்ற முழு கொள்ளளவை இன்று எட்டியது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முழு கொள்ளளவை எட்டியதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையில் இருந்து உபரி நீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. சுற்றுலா துணை அமைச்சர் ராஜேந்திரன் மேட்டூர் அணையைத் திறந்து வைத்தார். பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிட்டு, 12 மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

66
68 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய மேட்டூர் அணை

கரையோரப் பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு, வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகிறது. அணையிலிருந்து கடந்த ஜூன் 12-ம் தேதியே காவிரி படுகை பாசனத்திற்காக நீர் வெளியேற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 68 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணை தனது முழு கொள்ளளவை எட்டுவது இது 44-வது முறையாகும். அணை நீர் பாய்ந்து செல்லும் பகுதிகளை ஒட்டிய கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லும்படி தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories