
உலகம் போற்றும் விஞ்ஞானி, பிரதமரின் அறிவியல் ஆலோசகர், குடியரசு தலைவர் என பல பட்டங்களை ஏபிஜே அப்துல்கலாம் சுமந்தாலும், ராக்கெட் தாத்தா என அவரது பேரன்களால் அன்போடு அழைக்கப்பட்டே வந்தார்.
ஏ.பி.ஜே. அப்துல் கலாமிற்கு முகமது முத்து மீரா லெப்பை மரைக்காயர், முஸ்தஃபா கமால், காசிம் முகமது என மூன்று சகோதரர்களும், ஒரு மூத்த சகோதரிய அசிம் ஜொகரா இருந்தனர்,
இதில் முஸ்தஃபா கமால் அவர்களின் மகள் வழி பேரன் தான் நான் அஜ்மல்கான், பத்திரிக்கை துறையில் கால் வைத்து வின் டிவி, கலைஞர் செய்திகள், சன் டிவி, நியூஸ்ஜெ சேனல் என பல செய்தி தொலைக்காட்சிகளில் பணிபுரிந்த அனுபவம் உண்டு.
எனது அம்மாவின் சித்தப்பாவும் எனது அன்புக்குரிய தாத்தாவும் ஆன அப்துல் கலாம் அவர்களுடன் பழகிய பேசிய நினைவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன்.
இஸ்ரோவில் அப்துல் கலாம் பணியாற்றியபோது SLV-3-ன் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதுவே PSLV-யின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது. 1993-ல் முதல் வெற்றிகரமான PSLV ஏவுதலுக்கு வழிவகுத்தது.
எனவே என்னை போன்ற மற்ற பேரன்கள் எல்லோரும் விண்ணில் பாய்ந்த ராக்கெட் என்ற செய்தி டிவியில் வரும்போது அப்துல்கலாம் படத்தை பார்த்தாலே ராக்கெட் தாத்தா என்றே அழைத்து வந்தோம்.
பல முறை தாத்தா அப்துல்கலாமை சந்தித்து பேசியிருந்தாலும் எப்போதும் என்ன படிக்கிறாய்? ஒழுங்காக படி என அறிவுரை வழங்கி கொண்டே இருப்பார். இதன் காரணமாக அருகில் சென்றால் படிப்பு தொடர்பாக கேட்பாரே என பயந்து தள்ளி நின்ற காலங்களும் உண்டு.
எனக்கு சிறிய வயதில் எனது தாத்தா முஸ்தஃபா கமால், எனது அம்மாவுடன் சென்று தாத்தா அப்துல் கலாமை ஹைதராபாத்தில் சந்தித்தேன். அப்போது எனக்கு பரிசாக மரத்தாலான யானை பொம்மையை பரிசளித்தார். கல்வி தொடர்பாக ஆலோசனையையும் அளித்தார்.
அந்த பொம்மை தற்போதும் அவரது நினைவாக வீட்டை அலங்கரித்து வருகிறது. தனது வேலை பிஸியிலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உறவினர்களோடு பேசுவதை அப்துல்கலாம் விட்டுவிடவில்லை. அதிலும் தனது அண்ணன்கள் மீது அன்பும் பாசமும் கொண்டவர், தனது மூத்த அண்ணன் முகமது முத்து மீரா லெப்பை மரைக்காயரின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார்.
எனது தாத்தா முஸ்தஃபா கமாலிற்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர். அனைத்து பெண் பிள்ளைகளுக்கும் அப்துல்கலாம் தனது சம்பள பணம் அதாவது தனது சொந்த பணத்தில் இருந்தே திருமணத்தை நடத்தி வைத்தார். இதே போல மற்ற சகோதரர்களின் பெண் பிள்ளைகளுக்கும் தனது முயற்சியால் திருமணத்தை நடத்தினார். இதே போல ஆண் பிள்ளைகளுக்கு சொந்தமாக முன்னேற தொழில் தொடங்குவதற்காக சிறிய தொகையையும் அளித்துள்ளார்
தனக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட போதும் குடியரசு தலைவராக பொறுப்பேற்ற போதும் தனது உறவினர்களை டெல்லிக்கு அழைத்து நிகழ்ச்சியில் பங்கேற்கவைத்தார் அப்துல்கலாம். அதிலும் அப்துல் கலாம் குடியரசு தலைவராக இருந்த 2006ஆம் ஆண்டு மே மாதம் தனது சகோதரர்கள் குடும்பத்தினர் அனைவரையும் ஒன்று சேர்த்தார்.
தனது அண்ணன்களின் மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள் என 55 பேரை டெல்லிக்கு அழைத்து சென்றார். நிஜாம்தீன் ரயிலில் மதுரையில் இருந்து புறப்பட்ட அனைவரும் இரண்டு நாள் பயணமாக டெல்லியை சென்று அடைந்தோம். அங்கு எங்களுக்காக ரயில் நிலையத்தில் பேருந்துகள் காத்திருந்தது.
அங்கிருந்து எங்கள் அனைவரையும் ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து செல்லப்பட்டோம். அங்கு எங்களுக்காக காத்திருந்த தாத்தா அப்துல்கலாம் எங்களை வாசலில் வந்து வரவேற்று உள்ளே அழைத்து சென்றார்.
சுமார் 7 நாட்கள் ஜனாதிபதி மாளிகையில் தங்கியிருந்த நாட்கள் எப்போதும் மறக்க முடியாதவை. எங்களுக்கு என பாரம்பரியமான உலகப் புகழ்பெற்ற ஜனாதிபதி மாளிகையில் தனி அறைகள், தனித்தனி பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தினந்தோறும் ஜனாதிபதி அப்துல்கலாமோடு காலை, இரவு உணவு, டெல்லியில் உள்ள செங்கோட்டை, தீன்மூர்த்தி பவன், குதுப்மினார், அஜ்மீர் தர்ஹா என பல இடங்களை சுற்றிப்பார்க்க ஏற்பாடு, .இறுதி நாட்களுக்கு முன்பாக அனைத்து குடும்பத்தையும் தனித்தனியாக அவர்களது அறைக்கே நேரில் சென்று சந்தித்த தாத்தா அப்துல்கலாம் சிறுவர்களுக்கு கல்வி தொடர்பாக ஆலோசனையும், வழங்கினார் பெரியவர்களிடம் குடும்ப நிகழ்வுகளையும் நிதானமாக கேட்டறிந்தார்.
தனது உறவினர்களின் வருகைக்காக ஒரு ரூபாய் கூட அரசு பணத்தில் இருந்து செலவு செய்யவிடவில்லை. தனது மாத சம்பளத்தின் மூலம் மட்டுமே ராமேஸ்வரத்தில் இருந்து டெல்லிக்கு அனைவரையும் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து, டெல்லியில் சுற்றிபார்க்க பேருந்து ஏற்பாடு செய்தார். இது மட்டுமில்லாமல் ஜனாதிபதி மாளிகையில் உறவினர்கள் தங்கியிருந்த அறைக்கு வாடகை, உணவு விநியோகிகப்பட்டதற்கும் தனது பணத்தையே வழங்கினார்.
இந்தியாவின் முதல் குடிமகனாக இருந்தாலும் சாதாரண மக்கள் எப்படி இருக்கிறார்களோ தனது குடும்பமும் அப்படித்தான் இருக்க வேண்டும் என அப்துல்கலாம் நினைத்தார். உலகம் போற்றும் அப்துல் கலாமின் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதில் எனக்கு எப்போதும் பெருமை தான்...