ஹாங்காங், சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதைத் தொடர்ந்து, இந்தியாவிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் முகக்கவசம் கட்டாயம் என்ற தகவல் தவறானது என சுகாதாரத்துறை மறுத்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு இந்தியா மட்டுமின்றி உலக முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது. இந்த கொரோனா பாதிப்பால் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்தனர். கொரோனா பாதிப்பு அதிகரித்ததை அடுத்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு மீண்டு வருவதற்கு கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. பின்னர் மெல்ல மெல்ல பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவ்வப்போது கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்தாலும், பெரிய பாதிப்பு எதுவும் இல்லை.
24
மீண்டும் கொரோனா
தற்போது, ஹாங்காங், சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படும் நிலையில், இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி நாடு முழுவதும் 250க்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக கேரளாவில் 95, தமிழ்நாட்டிலும் 66 , மகாராஷ்டிராவில் 56 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
34
யாரும் அச்சப்பட தேவையில்லை
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். ஆனால் தமிழக சுகாதாரத்துறை தரப்பில் வீரியம் குறைந்த கொரோனா தொற்று பாதிப்பு என்பதால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று பரவி வரும் தகவல் தவறானது. கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அறிவிப்பு இதுவரை தமிழக அரசு சார்பாக வெளியிடப்படவில்லை என பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.