School College Holiday: மன்னார்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற ராஜகோபாலசாமி கோவிலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உலக பிரசித்தி பெற்ற ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. இங்கு உறையும் ராசகோபாலசுவாமி கிருஷ்ணரின் ஒரு வடிவமாக அறியப்படுகிறது. இந்த கோவில் 23 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இந்த கோவிலில் கடந்த 2010-ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. இந்நிலையில் இக்கோவிலுக்கு குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான நிதியை முதல்வர் ஸ்டாலின் ஒதுக்கினார். அரசு நிதி மற்றும் கொடையாளர் நிதி என சுமார் ரூ.16 கோடி வசூலிக்கப்பட்டது.
24
15 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு
கடந்த ஆண்டு ஜூலை மாதம் கோவிலில் குடமுழுக்கு திருப்பணிக்கு பாலாலயம் நடைபெற்று திருப்பணி தொடங்கியது. அதனை தொடர்ந்து ராஜகோபுரங்களை புதுப்பிக்கும் பணிகள் உள்ளிட்ட மற்ற திருப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதனால் கோவில் புது பொலிவுடன் காட்சியளிக்கிறது. இந்நிலையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடைபெற உள்ளதால் மன்னார்குடி மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
34
திருவாரூர் மாவட்ட ஆட்சியர்
இந்நிலையில், ராஜகோபாலசுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம் மற்றும் நகர பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில் குடமுழுக்கானது நாளை நடைபெற உள்ளது. எனவே, மேற்கண்ட நிகழ்வின் போது பொதுமக்கள் கலந்து கொள்வதற்கு ஏதுவாக உள்ளூர் விடுமுறை அளித்திட கோரி வலியுறுத்தப்பட்டது.
மேற்கண்ட செயல் அலுவலர் அவர்களின் கோரிக்கையை ஏற்று திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு (தேர்வுகளுக்கு இடையூறு இல்லாமல்) நாளை புதன் கிழமை ஒருநாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அளித்தும், மேற்படி விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு பிப்ரவரி 07ம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவித்தும் இதன் மூலம் ஆணையிடப்படுகிறது.