இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு கடந்த ஜூலை 11-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது பெண் வழக்கறிஞர் தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் 70 இணையதளங்களில் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ, புகைப்படங்கள் இடம் பெற்றுள்ள அனைத்து இணையதளங்களையும் மத்திய அரசு முடக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஜூலை 15-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
அதன்படி, பெண் வழக்கறிஞர் வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (ஜூலை 15) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி வீடியோ இடம்பெற்றிருந்த அனைத்து இணையதளங்களையும் முடக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், 39 இணையதளங்களில் இந்த வீடியோக்கள் மீண்டும் பரவி வருவதாகவும், அதை தடுக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, வீடியோக்கள் மீண்டும் பரவாமல் தடுப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, இணையதளங்களில் பகிரப்பட்ட அந்தரங்க வீடியோக்களை அகற்ற எங்கு புகார் அளிக்க வேண்டும், புகார் அளித்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து விரிவான மனுத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.