கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள்
வெயில் கொடுமையாலும், வாகனங்களின் சத்தத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தரக்கூடிய இடம் மலைப்பிரதேசமாக ஊட்டி, கொடைக்கானல், ஏழை மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை சென்று வருவார்கள். சாதாரண மக்கள் பாதிக்கப்படாத வகையில் சுற்றுலா தளங்களுக்கு குறைவான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
நுழைவு கட்டணம் அதிகரிப்பு
வழக்கமான நாட்களில் கொடைக்கானல் பிரையன்ட் பூங்கா, மற்றும் ரோஜா பூங்கா ஆகியவற்றிற்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 30 ரூபாயும், சிறியவர்களுக்கு 15 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்றிலிருந்து புதிய கட்டண முறையும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. ரோஜா பூங்கா மற்றும் பிரையண்ட் பூங்கா செல்ல நுழைவு கட்டணமாக இருந்த 30 ரூபாய் கட்டணம் 20 ரூபாய் உயர்த்தப்பட்டு 50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பல மடங்கு அதிகரித்த கட்டணம்
சிறியவர்களுக்கு 15 ரூபாயாக இருந்த நுழைவு கட்டணம் 10 ரூபாய் உயர்த்தப்பட்டு 25 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுபோல மாணவர்களுக்கு 25 ரூபாய் கட்டணமாகவும் இந்த இரண்டு பூங்காக்களுக்கு உள்ளே நுழைய நுழைவுக் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரோஜா பூங்காவில் இலவச வாகன நிறுத்தமாக இருந்த நிலையில் தற்போது இருசக்கர வாகனத்திற்கு 50 ரூபாயும் கார்களுக்கு 100 ரூபாயும் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
கட்டணத்தை திரும்ப பெற கோரிக்கை
திடீரென முன்னறிவிப்பு இன்றி உயர்த்தப்பட்ட கட்டண உயர்வால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். கட்டண உயர்வால் சாதரண மக்கள் சுற்றி பார்க்க முடியாத நிலை ஏற்படும் என்பதால் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.